துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகார சபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலை பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முத்துநகர் பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதோடு விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கிட்டத்தட்ட 1887 ஏக்கருக்கு மேற்பட்ட குடியிருப்பு காணியில் இவர்கள் வசித்து வருகின்றார்கள்.
இந்நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையினர் ஒரு இரவிலேயே கல்லுப்போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 1971ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே முத்துநகர் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அதற்கான ஆதாரங்கள் உட்பட ஆவணங்களும் மக்களிடம் இருக்கின்றன.
எனவே அவர்களுடைய காணி விடுவிப்பு தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் அக்மீமன மற்றும் அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏழை மக்களின் காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் யுத்தத்தால் இடம்பெயர்ந்த வெல்வெரி மக்களுடைய காணிகளையும் விடுவித்து தற்போது இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களையும் அங்கே மீளகுடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெல்வெரி பகுதியில் மக்கள் வாழ்ந்த வீடுகள், உடைந்த கட்டடங்கள் கிணறுகள், பலன்தரு மரங்கள் இன்னும் அங்கே இருக்கின்றன.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை வர வேண்டாம் என்று கூறிவிட்டு அந்த காணிகளை தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாம் ஏனைய காணிகளை வன வள பாதுகாப்பு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது.
எனவே இவற்றையும் விடுவிக்க இந்த அவையினூடாக கோரிக்கை விடுப்பதாகவும் மக்ஹெய்சர் விளையாட்டரங்கு புணரைப்பு, திருகோணமலை வைத்தியசாலையின் பௌதீக வள பற்றாக்குறை மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் உரையாற்றியிருந்தார்.
No comments:
Post a Comment