சீன ஜனாதிபதியை நாளை சந்திக்கிறார் இலங்கை ஜனாதிபதி : இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்படவுள்ள 7 ஒப்பந்தங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 12, 2025

சீன ஜனாதிபதியை நாளை சந்திக்கிறார் இலங்கை ஜனாதிபதி : இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்படவுள்ள 7 ஒப்பந்தங்கள்

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்கிற்கும் இடையிலான இரு தரப்பு சந்திப்பு 14ஆம் திகதி செய்வாய்க்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் முதலீடு, மின்துறை, மீன்பிடி, மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரதான துறைகளை உள்ளடக்கிய வகையில் 7 ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கைக்கும் - சீனாவுக்கும்; இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நீண்ட கால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் அமையும். இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா என்றும் தயாராகவே உள்ளது. நேர்மை, பரஸ்பர ஆதரவு மற்றும் நிலையான நட்புறவை உள்ளடக்கிய இலங்கையின் மூலோபாய கூட்டுறவு பங்பாளித்துவம் ஆகியவற்றால் இரு நாட்டு மக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு சீனாவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பின்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான உத்தியோகபூர்வ நான்கு நாள் அரசமுறை விஜயத்தை நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதியுடன் பரஸ்பர பல்துறை அபிவிருத்தி தொடர்பில் இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். மேலும் சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் சாவோ லெஜி ஆகியோருடன் இரு தரப்பு கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஈடுபடவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 7 இரு தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. மீன்பிடித்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சமூக நலன் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கும் வகையிலான திட்டங்கள், மீனவர்களுக்கான வீட்டுத் திட்டம், விவசாயத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தல் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் சீன அரசின் ஒத்துழைப்புடன் மின்சக்தி திட்டங்களை அறிமுகப்படுத்துவது இந்த புரிந்துணர்வு திட்டங்களில் ஒன்றாக காணப்படுகிறது.

சீன துறைமுக பொறியியல் நிறுவனம், சீனா மேர்ஷன்ட் குழுமம், சினொபெக், உவாவி, பி.வை.டி உள்ளிட்ட பிரதான சீன நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்குபெறும் முதலீட்டாளர் மன்றத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து டான்பெங் எலக்ட்ரிக் கோர்பரேஷன், ஜான் கி கிராமம், தியாங்கி லித்தியம் கோர்பரேஷன் மற்றும் செங்டு தேசிய வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிடவுள்ளார்.

அத்துடன் சிச்சுவான் மாகாணக் குழுவின் சீனக் கம்யூனிசக் கட்சியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் கடந்த வெள்ளிக்கிழமை (10) செய்தியாளர் சந்திப்பில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் ' இலங்கைக்கும் - சீனாவுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நீண்ட கால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் அமையும்.

சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் செயற்திட்டம், சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பல்துறை பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தில் விரிவாக ஆராயப்படும்.

இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா என்றும் தயாராகவே உள்ளது. நேர்மை, பரஸ்பர ஆதரவு மற்றும் நிலையான நட்புறவை உள்ளடக்கிய இலங்கையின் மூலோபாய கூட்டுறவு பங்பாளித்துவம் ஆகியவற்றால் இரு நாட்டு மக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும்' என செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீனாவும் இலங்கையும் நீண்ட கால நண்பர்களாகவும், நெருக்கமான அயல் நாடாகவும் உள்ளது.

1957 ஆம் ஆண்டில் இருந்து இரு நாடுகளும் இராஜதந்திர மட்டத்தில் தொடர்பு கொண்டுள்ளது. இரு தரப்பு உறவுகள் மாற்றமடையும் சர்வதேச நிலைவரங்களுக்கு மத்தியில் நிலையானதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment