(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கி அவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி அமைக்கப்படும் இந்த கட்டிடங்கள் என்ன? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டில் தெரிவு செய்யப்பட்ட சில அரசாங்கங்கள் பலஸ்தீன் பிரச்சினையை விட இஸ்ரேலுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தது.
இதன் மூலம் இஸ்ரேலுடன் வைத்துக் கொண்ட சில தொடர்புகள் காரணமாக பலஸ்தீன் தொடர்பில் எமது நாடு பின்பற்றி வந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச ரீதியில் எங்களுக்கு இருந்துவந்த நற்பெயரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது.
குறி்ப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் எமது நாடு தொடர்பில் இருந்து வந்த தொடர்பும் தற்போது ஓரளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.
எமது நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கி அவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மாத்தறை வெலிகம பிரதேசத்தில், தெஹிவளை அல்விஸ் பிரதேசத்தில் இவர்களின் மத நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று கொழும்பு 7 இல் ரெட் சினமனுக்கு முன்னால் பாரிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடங்களை நிர்மாணிக்கும் இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி அமைக்கப்படும் இந்த கட்டிடங்கள் என்ன?
இலங்கையில் யூதர்கள் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர்களின் மத வழிபாட்டுக்கு இந்தளவு பாரிய கட்டிடம் எதற்காக என கேட்கிறோம் ?
கடந்த ஒரு தினத்தில் அல்விஸ் பிளேசில் அமைக்கப்படும் கட்டிடத்துக்கு அருகாமையால் நடந்து சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து தெஹிவளை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர்படுத்தியே விடுவிக்கப்பட்டார். அந்தளவு பலத்த பாதுகாப்பு இஸ்ரேலியர்களால் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அதனால் பலஸ்தீன் ஆதரவு அரசாங்கம் என்ற வகையில், பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக எங்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடியவர்கள் என்ற வகையில் அமைக்கப்படும் இந்த கட்டிடங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? மறு பக்கத்தில் இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். ஏனெனில் மொசாட் இங்கு வருவது என்பது அது நல்ல விடயமல்ல.
வெலிகமவில் முஸ்லிம் மக்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களின் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இது தொடர்பாக அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
அதேபோன்று பலஸ்தீனில் பொதுமக்களை சிறுவர்களை கொலை செய்யும் இஸ்ரேல் இராணுவத்தினர் எமது நாட்டுக்குள் நுழைகிறார்கள். குறிப்பாக அவர்கள் பலஸ்தீனில் மேற்கொள்ளும் மனிதாபிமாமனமற்ற செயல்கள் காரணமாக உள ரீதியான் ஆறுதலை பெறுவதற்கே வருகின்றனர். இதன் காரணமாக அதிகமான நாடுகள் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வருவதை நிறுத்தி இருக்கின்றன. தென் ஆபிரிக்கா, லத்தீன் மெரிக்கா, மாலைதீவு போன்ற நாடுகள் நிறுத்தி இருக்கின்றன.
அதேநேரம் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளின் வருகை எமது நாட்டில் குறைவடைந்துள்ளது. அதனால் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் வருவதை தடுப்பதற்கு எதிர்காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment