கொழும்பு மாநகர பிரதேசத்தில் திண்மக் கழிவு நீரகற்றல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய 1,868 கோடி ரூபா (1867,80,77,179) நிதியை பயன்படுத்தாமல் நீண்ட கால வைப்புத் தொகையாக கொழும்பு மாநகர சபை வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.
இந்நிதி, 2023 இறுதி வரைக்கும் நீண்ட கால வைப்புத் தொகையாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது.
கொழும்பிலுள்ள பல தோட்டங்களில் திண்மக் கழிவுநீர் நிரம்பி வழிந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தக் காலகட்டத்திலேயே, இந்நிதி வழங்கப்பட்டது.
கொழும்பு கொம்பனித்தெரு, நாகலகம் வீதி, வனாத்தமுல்லை மற்றும் பிற தோட்டங்களில் சுமார் 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதைக் கருத்திற் கொண்டு திண்மக்கழிவகற்றல் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்நிதி வழங்கப்பட்டது.
உரிய நோக்கத்துக்கு இந்நிதியைப் பயன்படுத்தாமல், கொழும்பு மாநகர சபை விதிமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளது.
2014 முதல், ஆசிய அபிவிருத்தி வங்கி கொழும்பிலுள்ள கழிவு நீர் அகற்றல் கட்டமைப்புக்கு நிதியுதவி அளித்து வந்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்கள் அரச கணக்காய்வு தரநிலை, 3.2 இன் படி, நிதி அறிக்கைகளில் நிறுவனங்களின் வைப்புத் தொகை வெளியிடப்பட வேண்டும். ஆனால் அத்தகைய வெளிப்படுத்தலும் செய்யப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு விசாரணைக்கு கொழும்பு மாநகர சபை இன்னும் பதிலளிக்கவில்லை.
சொத்துக்கள் தரநிலைகளின்படி கணக்கிடப்பட வேண்டும். மேலும் சரியான வெளிப்படுத்தல்கள் செய்யப்பட வேண்டும் என்பது தலைமை கணக்காளரின் பரிந்துரையாகும்.
No comments:
Post a Comment