அறிவிக்கப்பட்டது இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் விபரம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2024

அறிவிக்கப்பட்டது இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் விபரம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 15 முதல் 17 ஆம் திகதி வரை இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது இரு தரப்பு விஜயம் இதுவாகும்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய ஜனாதிபதியை ராஷ்டிரபவனில் சந்திக்கவுள்ளதுடன், பரஸ்பர நலன் அடிப்படையிலான இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடியுடனும் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் டில்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும் இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக அவர் புத்த கயாவிற்கும் விஜயம் செய்யவுள்ளர்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் (IOR) கடல் மார்க்கமாக இந்தியாவின் மிகவும் நெருங்கிய அயலுறவாக உள்ள இலங்கையானது, இந்தியப் பிரதமரின் சாகர் நோக்கு (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் செழுமையும்) மற்றும் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையில் முக்கிய இடத்தினைக் கொண்டிருப்பதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலான ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகும் உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment