அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய மோசடியாளர்களுக்கும் சிறந்த பாடம் - அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய மோசடியாளர்களுக்கும் சிறந்த பாடம் - அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

(எம்.மனோசித்ரா)

மிக் விமானம் மற்றும் எயா பஸ் கொள்வனவுகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உதயங்க வீரதுங்க, கபில சந்திரசேனவுக்கு வழங்கியுள்ள தீர்ப்பு ஏனைய மோசடியாளர்களுக்கும் சிறந்த பாடமாகும். இவற்றை அடிப்படையாயகக் கொண்டு சர்வதேசத்தின் உதவியுடன் ஊழலில் ஈடுபட்டோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றபோது அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சிக் காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

தாமதமாகும் மற்றும் கைவிடப்பட்ட விசாணைகளை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின்போது ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்களின் கூச்சல்களுக்கு நாம் கீழ்படியப் போவதில்லை.

எமக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதா? நாம் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டோமா என நாமல் ராஜபக்ஷ போன்றோர் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர்.

உதயங்க வீரதுங்க, கபில சந்திரசேன போன்றோருக்கு தற்போது கிடைத்துள்ள தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டும் இவர்களால் தற்போது கேள்வியெழுப்ப முடியுமல்லவா?

எவ்வாறிருப்பினும் போதுமான கால அவகாசத்தை எடுத்து விசாரணைகளை முறையாக முன்னெடுத்து சட்ட நடவடிக்கை எடுப்போம்.

மிக் விமான கொள்வனவு மற்றும் எயா பஸ் கொள்வனவு என்பவற்றில் இடம்பெற்ற மோசடிகளை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இவர்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இங்கு முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு இலகுவானதாக அமையும். இவற்றில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

அரசாங்கம் என்ற ரீதியில் இவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கடந்த காலங்களில் தம்மை நிரபராதிகள் என நிரூபிக்க முற்பட்டவர்களுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தீர்ப்பு சிறந்த பாடமாகும் என்றார்.

No comments:

Post a Comment