இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 26, 2024

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.

உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் இன்று (26) இரவு 10.30 மணியளவில் அறிவித்தது.

இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழப்பை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த அவர்  டிசம்பர் 26ஆம் திகதி சுயநினைவை இழந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார்.  எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பல முயற்சிகள் செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவினை முதல் பிரதமர் வரை
கடந்த 1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி  பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் கா எனும் கிராமத்தில் பிறந்தார் மன்மோகன் சிங்.

தற்பொழுது அந்த கிராமம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.

தேசப் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பல லட்சம் இந்து மற்றும் சீக்கிய குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.

அமிர்தசரஸில் உள்ள இந்து கல்லூரி, பஞ்சாப் பல்கலைக்கழகம், பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வி கற்ற மன்மோகன் சிங் 1962 இல் ஒக்ஸ்ஃபோர்ட்  பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது கௌரவம் மிக்க ஆடம் ஸ்மித் பரிசை வென்றவர் சிங்.

கடந்த 1971 இல் வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராக அரசுப் பணியில் சேர்ந்தார். ஒரே ஆண்டிலேயே அவருக்கு அடுத்த முக்கியப் பதவி கிடைத்தது. 1972 இல் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் மன்மோகன் சிங்.

கடந்த 1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், 1985 முதல் 1987 வரை திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று நரசிம்மராவ் தலைமையில் 1991ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கப்பட்டபோது அந்நியச் செலாவணி பற்றாக்குறை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியா இருந்தது.

அந்த காலகட்டத்தில் அரசியல் பதவி எதையும் வகிக்காத மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் மூளையாக கருதப்படும் மன்மோகன் சிங், 1991-1996 ஆட்சிக் காலத்தில் நரசிம்ம ராவ் உடன் இணைந்து இந்தியாவில் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றை அமுலாக்கினார்.

சிறந்த நிதி அமைச்சருக்கான 'ஆசியா மணி அவார்ட்' (Asia Money Award for Finance Minister of the Year) விருதை 1993, 1994 ஆகிய ஆண்டுகளிலும், 'யூரோ மணி அவார்ட்' (Euro Money Award for Finance Minister of the Year) விருதை 1993ஆம் ஆண்டிலும் பெற்றார் மன்மோகன் சிங்.

கடந்த 1987 இல் இந்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றவர் மன்மோகன் சிங்.

காங்கிரஸ் கட்சி 2004 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பொறுப்பேற்க மறுத்தபோது மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment