(இராஜதுரை ஹஷான்)
2025 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதிக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்தால் மின்னுற்பத்திக்கு 40 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்ய நேரிடும். மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் இருப்பது மின் கட்டமைப்புக்கு சாதகமாக அமையும். மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான யோசனை எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படும். மறுசீரமைப்பு பணிகளை 2025 மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சின் மின்சாரத்துறை மறுசீரமைப்பு பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் புபுது நிரோஷன் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மின் கட்டண திருத்தம் மற்றும் மின்சாரத்துறை மறுசீரமைப்பு குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு மின்சார சபைக்கு காணப்படுகிறது.
எதிர்வரும் 06 மாத காலத்துக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் தற்போது அமுலில் உள்ள கட்டணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு முன்வைத்த பரிந்துரைகள் பற்றி அதிகளவில் பேசப்படுகிறது. இருப்பினும் தொழில்நுட்ப காரணிகள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதில்லை.
2025 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் முன்வைத்த பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் வாரம் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் அபிலாசைகளை கோரவுள்ளது. ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானத்தை எதிர்பார்த்துள்ளோம்.
2025 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலத்தில் கட்டண திருத்தமில்லாமல் தற்போதைய மின் கட்டணத்தை அமுல்படுத்தினால் மின்னுற்பத்தி, மின்சார விநியோகம் மற்றும் மின் விடுவிப்பு ஆகிய மூன்று செயற்பாடுகளுக்கும் 229 பில்லியன் ரூபா செலவாகும். ஆறு மாத காலத்துக்கு கட்டணம் திருத்தம் செய்தால் மேலதிகமாக 40 பில்லியன் ரூபாவை செலவிட நேரிடும்.
மின்னுற்பத்திக்கு செலவாகும் தொகைக்கு அமைய மின் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் திருத்தம் செய்திருந்தால் மின் கட்டணம் குறித்து பாரதூரமான பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருக்காது.
2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மின் கட்டணம் திருத்தம் செய்யபபடவில்லை.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் பின்னர் 2023 ஆம் ஆண்டு மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது.
2024 ஆம் ஆண்டு முதல் காலப்பகுதியில் 3 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க பரிந்துரைத்தபோதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 22 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கும், அதன் பின்னர் 13 சதவீதத்தால் குறைப்பதற்கு மின்சார சபை முன்மொழிவுகளை முன்வைத்தபோது 22 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்து மின் கட்டண திருத்தத்தை அமுல்படுத்தியது.
ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைக்கு மின் கட்டணத்தை குறைப்பதற்கு மின்சார சபை முன்மொழியாத நிலையிலும் இவ்விரு துறைகளுக்கும் மின் கட்டணத்தை குறைப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்து அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.
இவ்வாறான பின்னணியில் இந்த மாதம் (டிசெம்பர்) மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்திருந்தோம். 6 முதல் 11 சதவீதமளவில் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிந்திருந்தோம். இருப்பினும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்கவில்லை.
இலங்கை மின்சார சபை இலாபமடைவதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் பிரதான விநியோகஸ்த்தர்களுக்கு 112 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது.
கடன் மற்றும் மின்னுற்பத்திக்கான தொழில்நுட்ப காரணிகளை கருத்திற் கொண்டு மின் கட்டணத்தை எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கு திருத்தம் செய்யாமலிருக்க பரிந்துரைத்துள்ளோம்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதை தனியார் மயப்படுத்தல் என்று குறிப்பிட முடியாது. மின்சார சபையின் பிரதான மற்றும் துணை சேவைகளை முன்னெடுப்பதற்கு தனியார் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்படும். தற்போதும் ஒரு சில சேவைகள் தனியார் துறை ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
மின்சார சபையின் எந்த வளங்களையும் தனியார் மயப்படுத்தப் போவதில்லை. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான யோசனை எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படும்.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்து, மே மாதமளவில் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூல வரைவினை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment