(இராஜதுரை ஹஷான்)
சபாநாயகராக பதவி வகித்த அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த கடும் சர்ச்சைக்கு மத்தியில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதை தொடர்ந்து சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இருப்பினும் கல்வி தகைமை தொடர்பில் தான் பொய்யான விடயங்களை குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் சுயமாக பதவி விலகியமை இதுவே முதல் தடவையாக கருதப்படுகிறது. அத்துடன் கல்வி தகைமை விவகாரத்தில் குறுகிய காலத்தில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகியமை இதுவே முதல் தடவையாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அசோக சபுமல் ரன்வலவின் பெயரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தார். இதனை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார்.
சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் பிறிதொருவரின் பெயர் முன்மொழியப்படாத நிலையில் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தன்று சபாநாயகர் உத்தியோகபூர்வ தலைகவசத்தை தவறான முறையில் அணிந்திருந்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல தெரிவு செய்யப்பட்ட அதே வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் 'சபாநாயகர் அவரது கலாநிதி பட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்' என்று பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்த பதிவு சமூக கட்டமைப்பில் பிரதான பேசு பொருளாக காணப்பட்ட நிலையில் பொது நிகழ்வில் கலந்துகொண்ட சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவிடம் இவ்விடயம் குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோது 'தன்னிடம் இரண்டு பட்டங்கள் இருப்பதாகவும், கலாநிதி பட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விக்கு தற்போது பதிலளிப்பது அவசியமற்றது' என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோது கல்வி தகைமை குறித்து சபாநாயகர் பதிலளிப்பார் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின்போது இவ்விடயம் குறித்து சபாநாயகர் சபைக்கு விசேட அறிவிப்பை விடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் வஷிடோ பல்கலைக்கழகம் மாறுபட்ட கருத்தினை குறிப்பிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன.
சபாநாயகர் தனது கல்வி தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தின.
நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகர் கல்வி தகைமை விவகாரத்தில் மோசடி செய்வாராயின் எவ்வாறு பாராளுமன்றத்தின் சுயாதீனம் பாதுகாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
இவ்வாறான பின்னணியில் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்தது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன கட்சி ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டிருந்தது.
சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் கடும் சர்ச்சை எழுந்த நிலையில், தமது அரசாங்கத்தில் எவர் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்த நிலையில், சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எனது கல்வி தகைமை குறித்து சமூகத்தின் மத்தியில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கல்வி தகைமை குறித்து எவ்விதமான பொய்யான தகவல்களையும் நான் வழங்கவில்லை.
கல்வி தகைமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஒரு சில ஆவணங்கள் தற்சமயம் என்னிடம் இல்லை. அந்த ஆவணங்களை உரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விரைவாக பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளது.
எனக்கு கலாநிதி பட்டத்தை வழங்கிய ஜப்பானின் வஷிடா பல்கலைக்கழகத்துக்கு இணையான ஆராய்ச்சி நிறுவனம் கலாநிதி பட்டத்துக்குரிய ஆவணங்களை வெகுவிரைவில் வழங்குவதாக குறிப்பிட்டுள்ள நிலையில் அவற்றை வெகுவிரைவில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளேன்.
எவ்வாறாயினும் தோற்றம் பெற்றுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அரசாங்கத்தையும், எம்மீது நம்பிக்கை கொண்ட மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை தவிர்க்கும் வகையில் சபாநாயகர் பதவியை இராஜிநாமா செய்கிறேன்.
No comments:
Post a Comment