(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசிய உணவுப் பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. குரங்குகள் தேங்காய்களை உண்பதால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் கடந்த ஆண்டு நாட்டில் குரங்குகள் வாழவில்லையா என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த வாரம் நிலவிய மழையுடனான காலநிலையால் பெருமளவிலான விவசாய நிலங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விவசாயிகள் 70 ஆயிரத்துக்கும் அதிகளவில் செலவழித்துள்ள நிலையில் 40 ஆயிரம் ரூபா வழங்குவது எந்தளவுக்கு நியாயமானது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் நட்டஈடு தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் வினவியபோது 'டி.வி. சானக கேட்டுக் கொள்ளுங்கள், 2012, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் இவ்வாறுதான் நட்டஈடு வழங்கப்பட்டது' என்று குறிப்பிடுகிறார். ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறு குறிப்பிடவில்லை.
ஒரு பேனை கையொப்பத்தின் ஊடாக அனைத்தையும் மாற்றுவதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் இன்று ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய தீர்மானங்களை செயற்படுத்துவதாக குறிப்பிடுகின்றீர்கள்.
அரிசி தட்டுப்பாடு பற்றி குறிப்பிடப்படுகிறது. பெரும்போக விளைச்சல் அடுத்த ஆண்டே கிடைக்கப் பெறும். சிறுபோக விவசாயத்தின் விளைச்சல் எங்கே. அத்தியாவசிய உணவு பொருட்களின் மாபியாக்களின் செயற்பாடு வானளவில் உயர்வடைந்துள்ளது.
கடந்த ஆண்டு காலப்பகுதியில் குரங்குகள் தேங்காய்களை உண்ணவில்லையா? தேங்காய்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மை. மாபியாக்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
ஆட்சிக்கு வருவதற்காக தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட வாக்குறுதிகளை நினைவுப்படுத்த வேண்டும். வற் வரியில் இருந்து சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளை நீக்குவதாகவும், வரி சலுயை 15 சதவீதமாக குறைப்பதாகவும், உணவு பொருட்களின் விலையை குறைப்பதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டது.
நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment