உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஆடுவதற்கு இலங்கை வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது.
திக்வெல்லவின் 3 ஆண்டு போட்டித் தடையை 3 மாதங்களுக்கு குறைக்க இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை விடுத்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் மீது எடுகோளாக நடந்த ஊக்கமருந்து சோதனையின்போது தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியது கண்டறியப்பட்டதை அடுத்தே இலங்கை விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான திக்வெல்லவுக்கு கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி மூன்று ஆண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு எதிராக திக்வெல்ல மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்து அவர் மீதான தடை குறைக்கப்பட்டது.
இதன்போது போட்டிக் காலத்தில் திக்வெல்ல தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதோடு அவரிடம் அடையாளம் காணப்பட்ட பொருள் ‘விளையாட்டின் திறனை மேம்படுத்துவதற்கு’ தொடர்பற்றது என்பது கண்டறியப்பட்டது.
அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க அவர் தகுதி பெறுவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment