கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பான சிக்கல்களில் பொதுமக்கள் மட்டுமின்றி ஜனாதிபதியும் அசௌகரியத்துக்குள்ளானதற்கான காரணம், திணைக்கள உயர் நிர்வாகத்தின் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களே என குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலே இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டு மக்களை அசௌகரியத்துக்குள்ளாக்கிய அவ்வாறான அதிகாரிகள் யார் என்பதை வெளிப்படுத்துவது தமது சங்கத்தின் பொறுப்பு என்றும் இதற்காக முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை தொடர்பில், பல்வேறு தரப்பினரும் வெளியிட்டு வரும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக காணப்படுவதாகவும் அவை உண்மையற்றவை என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
சிக்கலை தீர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி திணைக்களம் இலங்கை பிரஜைகளுக்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பது சுமுகமாக முன்னெடுத்தது. எனினும், சில காலமாக இது நெருக்கடியானதாக மாறியுள்ளதால் இந்த திணைக்களத்தின் நிறைவேற்று மற்றும் உயர்மட்ட நிரந்தர அதிகாரிகளான தாம், பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டிலிருந்து இந்த நெருக்கடி ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கான பல்வேறு காரணங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன என்பதையும் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதில் குறிப்பிடத்தக்க காரணமாக தேவையான கடவுச்சீட்டுத் தொகை கையிருப்பில் இல்லாமை, உரிய காலத்தில் அதனை கொள்வனவு செய்யாமை, மக்களின் கேள்விக்கு ஏற்ற வகையில் சரியான மதிப்பீட்டை மேற்கொள்ளாமை, முறையற்ற விதத்தில் ஒன்லைன் முறையை ஆரம்பித்து அது சாத்தியமற்றதாக காணப்பட்டபோது அதனைக் கைவிட நேர்ந்தமை, உயர் மட்டத்தில் சிலர் மட்டுமே தீர்மானங்களை மேற்கொண்டமை, திணைக்களத்தின் நிரந்தரமான உயரதிகாரிகள் தீர்மானங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கணக்கிலெடுக்கப்படாமை, தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொண்டமை, அரசியல் ரீதியில் கருத்துக்களை உள்வாங்கியமை, மக்கள் சேவைக்கு அன்றி தனிப்பட்ட சிறப்புரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியமை ஆகியவற்றை அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலகுவாக மக்களின் தேவைகளை இனம்கண்டு தெளிவான தீர்மானங்கள் மூலம் அந்த நெருக்கடியை ஓரளவு நிவர்த்தி செய்திருக்கலாம் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தொலைபேசி மூலம் முன்வைக்கப்படும் விசாரணைகளுக்கு பதில் வழங்கும் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தாமை, பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தமது கடமையை நிறைவேற்றத் தவறியமை, ஊடகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒத்துழைப்பை தவறவிட்டமை போன்ற விடயங்களையும் அந்த சங்கம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment