டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிடியாணை! - News View

About Us

About Us

Breaking

Thursday, November 21, 2024

டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.

ரூபா. 20 மில்லியன் மதிப்பிழந்த காசோலை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் தனக்கு மதிப்பிழந்த காசோலையை கொடுத்து இருபது மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டதாக, டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்களை வழங்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (21) இது பற்றிய வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சாட்சிக்கு உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என சாட்சி சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், நீதவான் அவருக்கு பிடியாணை பிறப்பிக்க உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்பவர், வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்தும், தலா 10 மில்லியன் ரூபாவுக்கான 2 காசோலைகளை வழங்கி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் முதல் சாட்சியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சாட்சியமளிக்க நீதிமன்றத்தினால் திகதி வழங்கப்பட்ட நிலையில், அவர் அதற்கு ஆஜராகாமல் தவிர்த்ததாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் ஹேவா பத்திரண நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், சாட்சிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து முறைப்பாடு மீதான விசாரணையை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment