அநுராதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் காலத்தினதும் சமூகத்தினதும் கட்டாயத் தேவையாகும். இதனை பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பு என புதிய ஜனநாயக முன்னணியில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.
ஹொரவப்பொத்தானை கிவுளேகடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2015, 2020 களில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற நான், இந்த மாவட்டத்தில் இன, மத பேதமின்றி எவ்வித குறைபாடுமின்றி என்னாலான சேவைகளை செய்துள்ளேன்.
வீதி, பாடசாலை, சர்வமத வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு நிதியுதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.
20 வது பற்றி தெரியாமல் அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறியாதவர்கள் ஜனாஸாவை ஒப்பிட்டு பேசுகின்றார்கள். நான் எமது சமூகத்திற்கோ மாற்று மத சமூகத்திற்கோ எந்த துரோகமும் செய்யவில்லை.
சமூகத்தைப் பற்றிய சிந்தனையில்லாதவர்கள் எதிரணியினரின் தேர்தல் கால ஏஜண்டுகளாக பண முடிச்சிக்கு சோரம்போன சிலர் முகநூல் ஊடாக என்மீது போலி பிரசாரங்களை செய்து வருவதாக அறிகின்றேன்.
அவ்வாறான சில்லறைகள் யார் என்பதை அந்தந்த பிரதேச மக்கள் நன்கறிவார்கள். இதனால் அந்த சில்லறைகளைப் பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.
நான் மாவட்டதின் சகல பகுதிகளுக்கும் என்னாலான பணிகளை செய்துள்ளேன். அதனை எவரும் மறுப்பதற்கில்லை. அவைகளை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பலதையும் பேசி மக்களை திசைதிருப்ப எத்தனிக்கின்றனர்.
எமது மக்கள் பொது நலனில் அக்கறை கொண்டவர்களே தவிர, சுயநலவாதிகளல்ல. எந்த கிராமத்திற்கு சென்றாலும் பொதுப் பணியைத்தான் கேட்டு பெற்றுக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment