உறுதியான அரசாங்கத்தை அமைக்க தேசிய மக்கள் சக்தியிலிருந்து அதிகமானவர்களை அனுப்புங்கள் : எமது நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றவர்கள் எமக்கு வழிகாட்டத் தேவையில்லை - ஜனாதிபதி அநுரகுமார - News View

About Us

About Us

Breaking

Monday, November 11, 2024

உறுதியான அரசாங்கத்தை அமைக்க தேசிய மக்கள் சக்தியிலிருந்து அதிகமானவர்களை அனுப்புங்கள் : எமது நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றவர்கள் எமக்கு வழிகாட்டத் தேவையில்லை - ஜனாதிபதி அநுரகுமார

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் எந்த வகையிலும் வீழ்ச்சி அடைய செய்ய இடமளிக்காமல் எமது திட்டங்களை வலுவாக முன்னெடுப்போம். அதற்கு எமக்கு பாராளுமன்ற பலம் அவசியமாகும். நாட்டுக்காக சேவையாற்றக்கூடிய தொங்காத அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். எனவே உறுதியான அரசாங்கத்தை அமைக்க மக்கள் தேசிய மக்கள் சக்தியிலிருந்து அதிகளவிலான உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

'நாட்டை கட்டியெழுப்பும் நாம் மாற்றத்துக்கு ஒன்றாக' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் இறுதிநாள் தேர்தல் பிரசாரக்கூட்டம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் திங்கட்கிழமை (11) பிற்பகல் கம்பஹாவில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி; எமது வெற்றி மற்றவர்கள் அழும் அளவிற்கு இருக்க வேண்டும் என நாம் கூறினோம். எனினும் அவர்கள் தற்போது அழ ஆரம்பித்து விட்டனர். நாட்டுக்கு செய்த அநியாயத்துக்கு நிச்சயம் அவர்கள் அழ வேண்டும். அவர்களது வாழ்நாளில் இவ்வாறான ஒரு விடயத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிகாரம் அந்த குடும்பத்தில் இருந்து இந்த குடும்பத்துக்கும் இந்த குடும்பத்தில் இருந்து அந்த குடும்பத்துக்கும் கைமாறும் என நினைத்தார்கள். ஆனால் அதிகாரம் மக்கள் வசமாகும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையாக துக்கப்படுகின்றனர். துக்கம் மாத்திரம் அல்ல. அச்சமடைந்துள்ளனர். தற்போது பல கதைகளை கூறுகிறார்கள். நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற அக்கறை எமக்கு வாக்களித்தவர்களை விட அவர்களுக்கே அதிகம் உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஓய்வு பெறுவதாக கூறினார்கள். ஆனால் இரண்டு வாரங்களில் அரசியல் மேடையில் ஏறி உள்ளனர். இவர்களுக்கு இதனை விட்டுச்செல்ல முடியாது. அவர்கள் தோல்வியடைந்தாலும் செல்லமாட்டார்கள். தேர்தலையும் வெற்றி கொள்ள மாட்டார்கள்.

எமது வீட்டில் உள்ள தவளைகளை வீட்டிற்கு வெளியே கொண்டு சென்று விட்டாலும் அவை வீட்டுக்கு திரும்பியே வரும். அதேபோன்றுதான் இவர்களும் மோப்பம் பிடிப்பவர்கள் போன்று திரும்ப திரும்ப வருவார்கள். இதற்காக மக்கள் அவர்களை தோல்வியடைய செய்தனர்.

நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் தோற்றம் பெற்றுள்ளது. புதிய பாதையில் செல்வதற்காகவே எம்மை மக்கள் தெரிவு செய்துள்ளனர். எனவே இந்த மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை எம்மீது கொண்டுள்ள எதிர்பார்ப்பையும் எந்த வகையிலும் வீழ்ச்சிடைய செய்ய இடமளிக்காமல் இந்த திட்டங்களை வலுவாக முன்னெடுப்போம். சந்தேகம் கொள்ள வேண்டாம்.

மூன்று மாதத்திலும், ஆறு மாதத்திலும் வீழ்ச்சி அடைவோம் என்றார்கள். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை கட்டியெழுப்பியதன் பின்னரே தனது பயணத்தை நிறுத்தும். அதற்கு முன்னர் எம்மை நிறுத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது அரசாங்கத்தை சரியான பாதையில் வழி நடத்துவதற்கு அவர்களின் அனுபவம் உள்ளவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என கூறுகிறார்கள். எம்மை சரியான பாதையில் அனுப்ப அவர்கள் யார்? எமது நாட்டை அவர்களே தவறான பாதையில் கொண்டு சென்றனர். அவர்களே எமது நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு சென்றனர். எமக்கு வழிகாட்ட அவர்கள் தேவையில்லை.

நாம் புதிய பாதையில் பயணிக்க வேண்டும். எமக்கு பாராளுமன்றம் பலம் அவசியமாகும். நாட்டுக்காக வேலை செய்யும் தொங்காத அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். எனவே உறுதியான அரசாங்கத்தை அமைக்க திசைக்காட்டியிலிருந்து அதிகளவிலான உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்.

நாம் எமது இலக்கை நோக்கி பயணிப்போம். கட்டம்கட்டமாக நாம் இதனை செய்வோம். முதலில் இந்த நாட்டின் அரசியலுக்கு ஒரு தரம் அவசியப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு தாம் நினைத்த எல்லாவற்றையும் செய்ய முடியுமா? ஒரு கட்டமைப்புக்கு உட்பட வேண்டும். ஒரு ஒழுக்க வரைபுக்கு உட்பட்டே மக்களின் சொத்துக்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த வேண்டும். அரசியல்வாதியும் சட்டத்துக்கு உட்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்.

பொருளாதார ரீதியில் முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளோம். கடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. எதிர்வரும் மாதமளவில் கடன் மறுசீரமைப்பு பணிகளை முழுமையாக நிறைவு செய்வோம். 2028 ஆம் ஆண்டுக்கு பின்னரே கடன் செலுத்த வேண்டிவரும்.

சிலர் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய மூன்றாவது மீளாய்வு எதிர்வரும் மாதம் நிறைவு பெறவிருந்த நிலையில் தேர்தல் நடவடிக்கைகளினால் மீளாய்வு பணிகள் தாமதமடைந்துள்ளன.

தேர்தல் நிறைவடைந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள். 2025 ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் மீளாய்வு பணிகள் நிறைவடையும். அத்துடன் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான குறைநிரப்பு பிரேரணையை எதிர்வரும் மாதம் முன்வைப்போம். அதேபோல் பெப்ரவரி மாதம் முழுமையாக வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்போம்.

மேலும் நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள வறுமையை ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். நாம் அதனை செய்வோம். அத்துடன் கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி பாடசாலையில் வெளியேறும் மாணவர்கள் கல்வித்துறை மற்றும் தொழிற்துறை தொடர்பில் எதிர்காலத்தை அமைத்துக் கொண்டே வெளியேறுவார்கள். அதிலிருந்து எவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க மாட்டோம்.

அடுத்த வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நாம் புதிய செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment