மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது - காஞ்சன விஜேசேகர - News View

About Us

About Us

Breaking

Thursday, November 7, 2024

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது - காஞ்சன விஜேசேகர

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களை நியமிக்காமல் மின்சார கட்டணத்தை குறைக்க முடியாது. மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. டிசம்பர் மாதத்திலும் மின்சார கட்டணம் குறையப்போவதில்லை. அத்துடன் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்புக்கும் சட்டத்தை செயலாளரும் பொது முகாமையாளரும் மீறி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளரும், எரிசக்தி மற்றும் புதுப்பிக்க சக்தி முன்னாள் அமைச்சருமான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஒக்டோபர் மாதத்தில் இருந்து மின்சார கட்டணத்தை குறைப்பதாக அரசாங்கம் தெரிவித்து வந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மின்சார கட்டணம் குறைப்புக்கு அனுமதி வழங்க வேண்டியது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவாகும். ஆனால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் காலம் முடிவடைந்தும் இன்னும் ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் ஆணையாளர்கள் நியமிக்கப்படவில்லை. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நியமிக்கப்படாமல் எவ்வாறு மின்சார கட்டணம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என கேட்கிறோம்.

அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதாக மக்களை ஏமாற்றி வருகிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தந்தால் மின்சார கட்டணத்தில் மூன்றில் ஒன்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்திருந்தார். ஒக்டோபர் மாதத்தில் குறைப்பதாக தெரிவித்தார்கள். நவம்பர் மாதமாகியும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை.

மின்சார சபையின் சட்டத்தின் பிரகாரம் டிசம்பர் மாதத்திலும் மின்சார கட்டணத்தை குறைக்கப்போவதில்லை. மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம். ஆனால் அதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவே அனுமதி வழங்க வேண்டி இருக்கிறது.

மேலும் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து, இந்த வருடம் அது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது அந்த சட்டமே அமுலில் இருக்கிறது.

ஆனால் மின்சார சபையில் செயலாளர் மற்றும் பொது முகாமையாளர் சட்டத்தை மீறி செயற்பட்டு வருகிறார்கள். தேர்தலுக்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.

பாராளுமன்றத்தில் சட்டம் அனுமதிக்கப்பட்டால் அது மீண்டும் மாற்றப்படும் வரை நாட்டின் சட்டமாகும். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என யாருக்கும் தெரிக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு மீண்டும் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடியும். அதுவரை அந்த சட்டம் அமுலில் இருக்கும்.

அதேவேளை, இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபையை கூட்டி நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்திருந்தோம். அதாவது பணிப்பாளர் சபையில் இருக்கும் ஒருவர் பொது முகாமையாளர் மற்றும் மேலதிக பொது முகாமையாளர் பதவிக்கு நியமிக்க அவர் ஓய்வு பெறுவதற்கு குறைந்தது 2 வருடங்களாவது இருக்க வேண்டும் என்று.

ஓய்வு பெறுவதற்கு குறுகிய காலம் இருக்கும்போது இந்த பதவிகளுக்கு நியமிக்கும்போது அவர்கள் ஓய்வு பெறும்போது பெற்றுக் கொண்ட சம்பளமே ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டும். அதனால் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை எடுத்திருந்தோம்.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருக்கும்போது அரச நிதி துஷ்பிரயோம் தொடர்பில் கதைத்து வந்தாலும் தற்போது இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் அடுத்த மாதம் ஓய்வு பெற இருக்கிறார். இரண்டு மாதங்களில் பொது முகாமையாளர் ஒருவரால் எதுவும் செய்ய முடியாது. அரசாங்கம் தெரிவிப்பதை மாத்திரமே செய்வார் என்றார்.

No comments:

Post a Comment