ஹரின் பெனாண்டோ ரூபா 5 இலட்சம் கொண்ட 2 சரீரப் பிணைகளில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 20, 2024

ஹரின் பெனாண்டோ ரூபா 5 இலட்சம் கொண்ட 2 சரீரப் பிணைகளில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2024 பாராளுமன்றத் தேர்தல் பிரசார இறுதித்தினமான நவம்பர் 11ஆம் திகதி அவர் கலந்து கொண்ட சட்டவிரோத தேர்தல் பிரசார பேரணி தொடர்பில் இன்று (20) முற்பகல் வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு பதுளை பொலிஸார் விடுத்திருந்த அறிவித்தலுக்கமைய, அங்கு முன்னிலையான ஹரின் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அவர் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரை தலா ரூபா 500,000 கொண்ட இரு சரீரப் பிணைகளில விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பிரதம வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஹரின் பெனாண்டோ தனது ஆதரவாளர்களுடன் பட்டாசு கொளுத்தியும் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் பதுளை நகரத்தின் ஊடாக பேரணியாக பயணித்திருந்தனர்.

இவ்வேளையில், பதுளை பஹல வீதியில் ஊர்வலத்தை தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த சட்டவிரோத தேர்தல் பிரச்சார பேரணியை நிறுத்த, பதுளை தேர்தல் சர்ச்சைத் தீர்வு மையம் தலையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோவுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற சூடான வாக்குவாதம் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன்போது ஹரின் பெனாண்டோ தமக்கான விருப்பு இலக்கமான 10ஆம் இலக்கம் கொண்ட ரி-சேர்ட்டை கழற்றிக் கொடுத்து விட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றையதினம் (20) குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்த ஹரின் பெனாண்டோ, பதுளை பொலிஸ் நிலையத்தின் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தான் சிறையில் அடைக்கப்படுவேன் எனத் தெரிந்து சில ஆடைகளுடன் பொலிஸ் நிலையம் வந்ததாக ஹரின் பெனாண்டோ இதன் போது தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியை (NDF) பிரதிநிதித்துவப்படுத்தி பதுளை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட ஹரின் பெனாண்டோ, 9,371 வாக்குகளை மட்டுமே பெற முடிந்ததோடு, பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பையும் பெறத் தவறியிருந்தார்.

No comments:

Post a Comment