மன்னார் வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம் : சுகாதார அமைச்சின் விசேட குழு விஜயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 20, 2024

மன்னார் வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு மரணம் : சுகாதார அமைச்சின் விசேட குழு விஜயம்

மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்று (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்தார்.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லாத நிலையில் நேற்று (19) பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின்போது தாயும், சேயும் மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றினைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நீதவான் இறந்த தாய் மற்றும் சேயின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காகவும், மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்று (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், மாவட்ட ரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, வட மாகாண சுகாதார அமைச்சிடமும் விசாரணைகளை முன்னெடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

விசாரணையின் முடிவில் தவறிழைத்தமை கண்டுபிடிக்கப்பட்டால் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

No comments:

Post a Comment