(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பெரும்போக விவசாயத்தில் 4800 ஏக்கர் நெற் பயிர்ச் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3900 ஏக்கர் நெற் செய்கை பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
விவசாயத்துறை அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நலன்புரி திட்டத்துக்கமைய விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயிகளுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படும். தேசிய மட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளை வளப்படுத்தாமல் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த முடியாது.
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பெரும்போக விவசாயத்தில் 4800 ஏக்கர் நெற் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3900 ஏக்கர் நெற் பயிர்ச் செய்கை பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மதிப்பீடுகளின் பின்னர் நிவாரணம் வழங்கப்படும்.
வெள்ளப் பெருக்கினால் இதுவரையில் 106 குளங்கள் சேமதடைந்துள்ளதுடன், 30 பெருங்குளங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இவற்றை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இயற்கை அனர்த்தங்களையும் ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்திக் கொள்வது அதிருப்திக்குரியது என்றார்.
அம்பாறை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வயல் நிலங்களில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால் இரண்டு அடிக்கு உயரமாக மணல் மேடுகள் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. மகாவலி 'சி' வலய விவசாய திட்டங்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment