பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி விசேட உரை : பி.ப. 3.00 மணிக்கு அரச கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பிப்பார் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 16, 2024

பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி விசேட உரை : பி.ப. 3.00 மணிக்கு அரச கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பிப்பார்

10ஆவது பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு கூடவுள்ளது. இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பட்டியல் மூலம் அந்தந்த கட்சிகளால் பரிந்துரை செய்யப்படும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதோடு சபாநாயகர் தெரிவு, எம். பிக்களின் பதவிப்பிரமாண நிகழ்வும் இடம்பெறும்.

இந்த ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பி.ப. 3.00 மணிக்கு விசேட உரை நிகழ்த்தி, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.

இது தொடர்பில், பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தல் வருமாறு, அரசியலமைப்பின் 33 (அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் வைபவரீதியான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

அதற்கமைய, பாராளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்தொடர் ஆரம்பத்தில் போதும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் ஜனாதிபதியினால் சமர்பிக்கப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதியினால் அவரது அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைக்கப்படும். கடந்த காலத்தில் இது மகா தேசாதிபதியால் வழங்கப்படும் அக்கிராசன உரை என்று அறியப்பட்டது.

முதலாவது பாராளுமன்றத்தின் அதாவது பிரதிநிதிகள் சபையின் முதலாவது கூட்டத்தொடர் 1947 ஒக்டோபர் 14 ஆம் திகதி இடம்பெற்றது. இதனை வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்து ஆளுநர் சேர். கென்றி மொங் மாசொன் மூர் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் சிம்மாசன உரையை நிகழ்த்தியதுடன், பின்னர் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நன்றிப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், அரசியலமைப்பின் 70(1) உறுப்புரைக்கு அமைய நடப்புப் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதிகு அதிகாரம் உள்ளது. கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது அதுவரை பாராளுமன்றத்தில் காணப்பட்ட அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்படுவதுடன் குற்றப்பிரேரணை (Impeachment) தவிர்ந்த அதுவரை சபையில் இடம்பெற்றுவந்த அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும். அவ்வாறு கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் புதிய கூட்டத்தொடர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. அவ்வாறு புதிய கூட்டத்தொடர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும் போது ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்படுகின்றது. அதற்கமைய, இரண்டாவது பாராளுமன்றத்தின் (பிரதிநிதிகள் சபையின்) மூன்றாவது கூட்டத்தொடர் இரண்டாவது எலிசபெத் மகாராணி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது விசேட அம்சமாகும். 1954 ஏப்ரல் 12 ஆம் திகதி மகாராணியினால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இங்கு மகாராணியினது அக்கிராசன உரை இடம்பெற்றதுடன் இவ்வுரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

1978 புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது அக்கிராசன உரைக்குப் பதிலாக அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் முறை அமுலுக்கு வந்தது. அத்துடன், தற்போதைய நடைமுறையின் படி ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் அரசங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் விவாதமோ வாக்கெடுப்போ பொதுவாக இடம்பெறுவதில்லை.

அதற்கமைய, 1978 செப்டெம்பர் 07 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டதுடன், முதன்முறையாக அவரினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது.

பின்னாட்களில் பாராளுமன்ற முதல்நாள் அமர்வுகள் வைபவ ரீதியாகவோ அல்லது வைபவ ரீதியற்றோ ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பாராளுமன்றப் பதிவுகளின் மூலம் காணக்கூடியதாக உள்ளது. அதேபோன்று, முதல்நாள் அமர்வு ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படாத சந்தர்ப்பங்கள் காணப்படுவதுடன், எனினும் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றுள்ளது. 2020 ஓகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்த அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் இவ்வாறு விவாதம் இடம்பெற்றது. 2020 ஓகஸ்ட் 21 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இந்த விவாதம் இடம்பெற்றதுடன், அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

1978 முதல் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் முதல் 2024 செப்டம்பர் 24 ஆம் திகதி கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றம் வரையான முதல்நாள் அமர்வு மற்றும் அவற்றில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவபரங்கள் பின்வருமாறு.

No comments:

Post a Comment