பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் கன்னி அமர்வு வைபவ ரீதியாக ஆரம்பமான நிலையில், பத்தாவது பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார்.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கலாநிதி அசோக ரன்வல சபாநாயகராக வாக்கெடுப்பின்றி தெரிவு செய்யப்பட்டார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் அசோக ரன்வலவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பெயரை முன்மொழிந்த பிரதமர் மற்றும் வழிமொழிந்த அமைச்சர் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக புதிய சபாநாயகரை அக்கிராசனத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் பதவிச்சத்தியமும், பின்னர் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியமும் இடம்பெற்றது.
புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சபாநாயகர் பதவிக்குத் தன்னைத் தெரிவு செய்தமை குறித்து நன்றி தெரிவித்த அவர் குறிப்பிடுகையில், நாட்டின் அதியுயர் ஸ்தாபனம் என்ற ரீதியில் பாராளுமன்றம் தனது சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான கருமங்களை ஆற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகளின்படி, முன்னுதாரணமான பாராளுமன்றத்தை உருவாக்குதற்குத் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும், இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் கூடிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மிகவும் திறம்பட அமுல்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றக் குழுப் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துவதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற விவகாரங்களில் முன்மாதிரியாகவும் ஒழுக்கமாகவும் பங்களிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட அசோக ரன்வல, கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை கம்பஹா மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வருட பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 109,332 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தின் விருப்பு வாக்கு பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இவர் பியகம யதிஹேன ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கம்பஹா ஹேனேகம மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்டார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் பட்டதாரியான சபாநாயகர், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் இரசாயன கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றிய ரன்வல, பியகம பிரதேச சபை மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பணியை ஆரம்பித்திருந்தார்.
உயிர் தலைமுறை பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் (Director of Biogeneration Economics Research Institute) கடமையாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment