சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்துவதன் மூலம் நரம்புகளில் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு மேலும் தெரிவிக்கையில், இந்த கிரீம் வகைகளை தயாரிப்பதற்கு அதிகபட்சமான கனரக உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் தோல் மிகவும் மென்மையாதல், தோல் புற்றுநோய் மற்றும் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின்படி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கிரீம் வகைகளில் ஒரு கிலோ கிராமுக்கு ஒரு மில்லி கிராம் பாதரசமே பயன்படுத்த வேண்டும். ஆனால், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவு பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு - புறக்கோட்டையில் உள்ள அழகு சாதனக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பல வகையான அழகுசாதனப் பொருட்களை, நுகர்வோர் விவகார அதிகார சபை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அழகு சாதனப் பொருட்கள் வைத்திய பரிந்துரைக்கு அமைய பயன்படுத்தக் கூடிய மற்றும் மருந்தகங்களில் மாத்திரமே விற்பனை செய்யக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புறக்கோட்டையில் உள்ள அழகு சாதனக் கடைகளில் நேற்று (18) நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், சருமத்தை வெண்மையாக்குவதற்காக சில நுகர்வோர் அவற்றை கொள்வனது செய்வது தெரியவந்துள்ளது.
தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை அகற்றுவதற்காக இவை பயன்படுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த அழகு சாதனப் பொருட்களை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பெற முடியும் எனவும் அவற்றை பதிவு செய்யப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே விற்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பல்வேறு நபர்கள் தமது சருமத்தை வெண்மையாக்குவதற்காக இவ்வாறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முனைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் சஞ்சீவ வீரசிங்க, (சுற்றிவளைப்புக்கள் மற்றும் விசேட விசாரணைகள்) இது குறித்து தெரிவிக்கையில், "வெள்ளையாக வேண்டும் என்ற ஆசை அதிகம் உள்ளது. இளம் பெண்கள் மட்டுமின்றி ஆண் பிள்ளைகளும் இந்த அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இது உடலுக்கு நல்லதல்ல. புறக்கோட்டையில் உள்ள 16 கடைகளில் இந்த அழகுசாதனப் பொருட்கள் கிடைத்துள்ளன." என தெரிவித்தார்.
No comments:
Post a Comment