ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் : சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2024

ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் : சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சியில் இருக்கும்போது ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிரூபிக்க வேண்டும். போலியான குற்றச்சாட்டுக்களினால் அரசியலில் சற்று பின்னடைந்துள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் எமது ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எம் தலைவர்கள் மீது முன்வைக்கப்பட்ட போலியான குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் அவதானம் செலுத்தினார்கள். அதன் காரணமாகவே அரசியலில் பின்னடைந்துள்ளோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது ராஜபக்ஷர்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஊழல் மோசடிக்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டார்.

நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மற்றும் தத்துவங்கள் அவரிடம் உள்ளன. ஆகவே எதிர்க்கட்சியில் இருக்கும்போது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.

போலியான குற்றச்சாட்டுக்களை கவனத்திற் கொண்டுதான் எமக்கு ஆதரவளித்த மக்கள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பக்கம் சென்றுள்ளார்கள். ஆகவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மக்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டின் இறையாண்மையை முன்னிலைப்படுத்தி எடுக்கும் சிறந்த தீர்மானத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment