விமான நிலையங்களினூடாக நாட்டுக்குள் நுழையக்கூடிய Mpox குரங்கம்மை நோயாளிகளை அடையாளம் காணும் வகையில் நோய்த்தடுப்பு கட்டமைப்பு முறையை சுகாதார அமைச்சு வலுப்படுத்தியுள்ளது.
குரங்கம்மை நோயாளிகள் பதிவாகினால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வசதி கொழும்பில் உள்ள தொற்றுநோய் நிறுவகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் Mpox நோயாளிகளை கண்டறிவதற்கு ஆய்வுகூட வசதிகள் உள்ளன. கடந்த 20ஆம் திகதி சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிபுணர் குழுக் கூட்டத்தில் இந்நோய்க்கான சிறந்த தயார்நிலை மற்றும் பதிலளிப்பு தொடர்பில் தேவையான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை கடிதம் அனைத்து சுகாதார நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆபிரிக்க பிராந்தியத்தில் முக்கியமாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்தியத்திலுள்ள நாடுகளில் குறிப்பாக கொங்கோவில் இந்நோயின் அதிக தாக்கம் மற்றும் தீவிரத்தன்மை காரணமாக உலக சுகாதார அமைப்பால் ஓகஸ்ட் 14/2024 அன்று ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச அழைப்பு விடுக்கப்பட்டது.
உலகளவில் தயார்நிலை மற்றும் பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிய பிராந்தியத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளில் இந்நோய் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Mpox (Monkeypox) என்பது Mpox வைரஸால் ஏற்படுகிறது. மேலும் Mpox நோய்த்தொற்றுடைய நபரின் உடல் திரவங்கள், காயங்கள் மற்றும் சுவாசக்குழாய்களில் நீண்டகால வெளிப்பாட்டின் மூலம் பரவுவதால், நோய் பரவும் அபாயம் குறைவு.
பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகள் அல்லது உடைகள் மூலம் நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. காய்ச்சல், தோலில் கொப்புளங்கள் மற்றும் நிணநீர் கணுக்கள் வீங்குவது குரங்கம்மை நோயின் முக்கிய அறிகுறிகளாகுமென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment