கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா இன்று (07) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை சரீர பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து சனிக்கிழமை (3) காலை வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை இன்று புதன்கிழமை (07) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மீண்டும் வைத்தியர் அர்ச்சுனா இன்று (7) புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை சரீர பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
வைத்தியர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
மன்னார் நீதிவான் நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபாய் இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
இந்த நிலையில் நீதிமன்றத்தினால் புதன்கிழமை (7) நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கினர்.
பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மன்னார் - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவமானது கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது.
மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) எனத் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணின் மரணத்தின்போது சம்பவ தினம் விடுதியிலிருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் எனக் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் அங்கு கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment