(இராஜதுரை ஹஷான்)
கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் மக்கள் ராஜபக்ஷர்கள் குடும்பம் மீது வைராக்கியத்துடன் உள்ளார்கள். தேர்தலில் 3 சதவீத வாக்குகளை பெறுவது கூட பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு சவாலானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சர்வஜன கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை 39 பேர் போட்டியிடுகிறார்கள். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் சகாக்களாகவே ஒரு தரப்பினர் போட்டியிடுகிறார்கள். கட்டுப்பணம் வைப்பிலிடும் தொகை குறைவானதால் எவ்வித வரையறைகளும் இல்லாமல் பலர் போட்டியிடுகிறார்கள்.
1981 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பணம்தான் இன்றும் அமுலில் உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு 5000 ரூபா, சுயேட்சை வேட்பாளருக்கு 75000 ரூபா என்ற அடிப்படையில் கட்டுப்பணத் தொகை காணப்படுகிறது. பொருளாதார பாதிப்புக்கு பின்னர் வாழ்க்கைச் செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பணத் தொகை அதிகரிக்கப்படவில்லை.
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றாத அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆகவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிடும்போது அதற்கான வரையறைகள் அரசியலமைப்பு ஊடாக விதிக்கப்பட வேண்டும். மறுபுறம் சுயேட்சை வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை 1 கோடியாக அதிகரிக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் யார் முன்னிலையில் உள்ளார்கள் என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் 22 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. இவர்களை இலக்காகக்கொண்டு பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
69 இலட்சம் மக்களாணை ராஜபக்ஷர்களின் குடும்ப சொத்தல்ல, சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டத்துக்காகவே 69 இலட்சம் மக்கள் கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கினார்கள். சுபீட்சமான கொள்கையை செயற்படுத்துவதை விடுத்து கோட்டபய ராஜபக்ஷ பஷில் - ஜூலி சங் கொள்கையை செயற்படுத்தினார். இதனால் நாட்டு மக்கள் அவரை விரட்டியடித்தார்கள்.
69 இலட்சம் மக்கள் ராஜபக்ஷர்கள் மீது வைராக்கியத்துடன் உள்ளார்கள். ஆகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ 3 சதவீத வாக்குகளை பெறுவது கூட சவால்மிக்கது என்றார்.
No comments:
Post a Comment