விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ உரம் மூடையை 5 ஆயிரம் ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Sunday, August 25, 2024

விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ உரம் மூடையை 5 ஆயிரம் ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - சஜித் பிரேமதாச

விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் எடையுள்ள உரம் மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய இரசாயன மருந்துகள், உரம் என்பனவற்றுக்கு ஒழுங்கு முறையான விலை நிர்ணயத்தை மேற்கொண்டு, இருட்டடிப்புச் செய்கின்ற வர்த்தகர்களின் விலை அதிகரிப்புக்கு இடமளிக்காது, மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமான விலைக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும் உர விநியோகத்தின்போது கமநல சேவைகள் மத்திய நிலையத்தை மையமாகக்கொண்டு வெளிப்படைத் தன்மையுடன் இந்த செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொலன்னறுவை, ஹிங்குராங்கொட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதின்நான்காவது மக்கள் வெற்றிப் பேரணி நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், QR Code முறையை மையப்படுத்தி விவசாயிகளுக்கு, மீன்பிடித் தொழிலாளர்களுக்கு, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, பாடசாலை போக்குவரத்து சேவையாளர்களுக்கு, ஆலையுரிமையாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா அச்சுறுத்தல், உர மோசடி, நானோ உர மோசடி போன்றவற்றின் ஊடாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தம்மிடம் உள்ள பணத்தைக் கொண்டும் தங்க ஆபரணங்களை அடகு வைத்து, கிடைக்கின்ற பணத்தை கொண்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு கடந்த காலங்களில் அடிக்கு மேல் அடி விழுந்து அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவ்வாறு அழுத்தங்களுக்கு உள்ளாகி மூன்று வேலையும் உணவு உண்ண முடியாமல் இருக்கின்ற விவசாயிகளின் விவசாய கடனை இரத்து செய்வோம்.

அத்தோடு விவசாயிகளின் விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலை ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். மோசடியான முறையில் விவசாயிகளையும் நுகர்வோர்களையும் பாதிக்கின்ற ஏற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. நுகர்வோருக்கும் சாதாரண விலையில் பொருள் கிடைப்பதோடு நெல்லுக்கும் உயர்ந்த நிர்ணய விலை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

பிணைகள் இன்றி அரச வங்கிகளில் கோடிக்கணக்கான தொகையை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ள செல்வந்தர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களோடு நட்புறவைப் பேணி அந்தக் கடன் தொகைகளை இரத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டுக்கு உணவளிக்கின்ற விவசாயிகளுக்கு நன்றி உணர்வாக இந்தக் கடன்களை இரத்து செய்வோம். இந்த சிறிய மனிதர்களின் ஜனாதிபதி என்ற வகையில் அந்தப் பணியை நிறைவேற்றுவேன். நாட்டுக்கு உணவு அளிக்கின்ற விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.

பல மாவட்டங்களில் பரம்பரையாக காணப்பட்ட விவசாய காணிகள் இல்லாமல் போயிருக்கின்றது. பல தசாப்தங்களாக எல்லை கற்களை இட்டு விவசாயம் செய்த காணிகள் அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கின்றது. அந்தக் காணிகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதோடு, இந்த நாட்டின் இயற்கை வளங்கள், வன வளங்கள் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி மக்கள் மயப்படுத்தப்பட்ட வனவளங்களாக பாதுகாத்து, விவசாய நிலங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்போம். சேதமடைகின்ற விவசாயிகளின் பயிர்களுக்கு முறையான காப்புருதி திட்டம் ஒன்றையும் ஏற்படுத்துவதோடு, காட்டு யானை தாக்குதல்களையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .

நாட்டில் தற்பொழுது வேலை செய்ய முடியாத தலைவர்கள் இருக்கின்ற போதும், ஐக்கிய மக்கள் சக்தி 76 வருட ஜனநாயக காலத்தில் பிரபஞ்சம் மூச்சு போன்ற வேலை திட்டங்களின் ஊடாக பில்லியன் கணக்கான வேலைகளை முன்னெடுத்துள்ளோம். இப்பொழுது மக்கள் அபிப்பிராயத்திற்காக வந்திருக்கின்றோம்.

இனிய தலைவர்கள் நாட்டைச் சுற்றி வெற்றிப் பேச்சுக்களோடு சென்ற போதும் நாம் நாட்டுக்கு சேவை செய்திருக்கின்றோம். வெற்றிப் பேச்சுக்களோடும் வெறும் காட்சிப்படுத்தல்களோடு மாத்திரம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment