அரச அதிகாரிகள் தமது பணி நேரத்தில் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்கு அல்லது வேறெந்த கணக்கை பயன்படுத்தி அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை ஊக்குவிக்கும் அல்லது பாரபட்சம் காட்டுவது போன்ற பிரசாரம் செய்வது கடுமையான குற்றமாகுமென, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அவ்வாறானவர்களுக்கு 3 வருட சிறைத் தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாவுக்கு குறையாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாமெனவும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் உரிமைகளை இழந்த அரச அதிகாரிக்கும் இந்த நடைமுறை பொருந்துமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை விளம்பரப்படுத்த அல்லது பாரபட்சம் காட்டுவதற்காக ஒருவரின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்கு அல்லது வேறு ஏதேனும் கணக்கை பயன்படுத்துதல் மற்றும் ஏதேனும் விளம்பரம் அல்லது அறிக்கையை வெளியிடுவதும் அதே குற்றத்தின் கீழ் கருதப்படுவதாகவும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு ஊழியர் மட்டுமன்றி இந்த சுற்றறிக்கை அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் சட்டபூர்வ கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் பொருந்துமென்றும் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கருத்திற்கொண்டு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன் அரச மற்றும் அரை அரச ஊழியர்கள் (Semi Government), கட்சிகள் அல்லது தனிநபர்களை ஊக்குவித்தல் அல்லது பாரபட்சம் காட்டுவதை தடுப்பதற்காகவே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை எண் 5 இன் கீழ் இலக்கம் 8 IV மற்றும் இல. 17 இன் கீழ் ‘மிக முக்கியமானது’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment