அதிகளவில் வரி நிலுவை உள்ளதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை : 2023 ஆம் ஆண்டில் வரலாற்றில் 3 டிரில்லியன் ரூபாய் சாதனைமிகு வருமானம் - மதுவரி ஆணையாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 26, 2024

அதிகளவில் வரி நிலுவை உள்ளதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை : 2023 ஆம் ஆண்டில் வரலாற்றில் 3 டிரில்லியன் ரூபாய் சாதனைமிகு வருமானம் - மதுவரி ஆணையாளர் நாயகம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று பிரதான அரச வருமான மூலங்களில், பாரிய நிலுவைத் தொகை இருப்பதாக வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.

இந்த மூன்று நிறுவனங்களிலும் நிலுவையில் உள்ள வரித் தொகை 90 பில்லியன் ரூபாய் மாத்திரமே என சுட்டிக்காட்டிய அவர், உலகில் எந்தவொரு நாட்டின் மொத்த வரி வருமானத்தில் 3% – 5% வரையானது நிலுவையில் உள்ள வரி என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும், இந்த மூன்று நிறுவனங்களும் 2023 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக அதிக வருமானமாக, 3 டிரில்லியன் ரூபாயைத் தாண்டி வருமானம் பெற்றுள்ளதுடன், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்மைக் கணக்கில் மேலதிகத்தை உருவாக்க முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி மேலும் கூறியதாவது, “நிதி அமைச்சின் கீழ் அரச வருமானத்தை ஈட்டித்தரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று நிறுவனங்களும் சட்டக் கட்டமைப்பிற்குள் உரிய வரிகளை வசூலிக்கின்றன. ஆனால் இந்த நாட்டில் அதிகளவு வரி நிலுவை இருப்பதாக ஒரு மாயையைப் பரப்ப சில குழுக்கள் செயல்படுகின்றன.

ஆனால் இந்த மூன்று நிறுவனங்களிலும் நிலுவையாக உள்ள வரிகளின் மொத்தத் தொகை 90 பில்லியன் ரூபாய்க்கும் குறைவு என்பதைக் கூற வேண்டும். அந்த வரி வருமானத்தைச் செலுத்த வேண்டிய நிறுவனங்களில் பெரும்பாலானவை அரச நிறுவனங்கள் என்பதை குறிப்பிட வேண்டும். ஏனைய நிறுவனங்களிடமிருந்து வரிப் பணத்தை வசூலிக்க நீதிமன்றங்களை அணுகியுள்ளோம்.

எனவே, அந்தத் தொகையை ஒத்திவைக்கப்பட்ட வரியாகவே கருத வேண்டும். நீதித்துறை செயல்முறை முடிந்த பிறகு, மீண்டும் வரி வசூலிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், எந்த நாட்டினதும் மொத்த வரி வருமானத்தில் 3%-5% வரி நிலுவையாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அரச வரி வருமானம் பெருமளவு அதிகரித்துள்ளது.

இதன்படி, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று நிறுவனங்களும் 2023ஆம் ஆண்டில் 3 டிரில்லியன் ரூபாயைத் தாண்டி, வரலாற்றில் அதிகூடிய வருமானத்தைப் பெற்றுள்ளன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்மைக் கணக்கில் மேலதிகத்தை உருவாக்க முடிந்தது என்பதையும் கூற வேண்டும்.

இதன்போது, மதுவரித் திணைக்களம் தொடர்பில் அவதானம் செலுத்தினால் 2023 இல் 179 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கு 232 பில்லியன் ரூபாயாகும். 2023 ஆகஸ்ட் 22 இல், நாங்கள் 106.5 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டினோம், 2024 ஆகஸ்ட்டில், நாங்கள் 132.7 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளோம். அதன்படி, இந்த ஆண்டு 24.6% வளர்ச்சியைக் காட்டுகிறது.

மேலும், அனுமதிப் பத்திரம் வழங்குவதன் மூலம் மதுவரித் திணைக்களத்துக்கு வருமானம் கிடைக்கிறது. மாநகர சபை எல்லையில் 15 மில்லியன் ரூபாய், நகர சபையில் 12.5 மில்லியன் ரூபாய், பிரதேச சபை எல்லையில் 10 மில்லியன் ரூபாய் அறவிடப்படுகிறது. ஒரு உற்பத்தித் தொழிற்சாலைக்கான அனுமதிப் பத்திரம் 25 மில்லியன் ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

இவ்வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை எமது திணைக்களம் 132.4 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டில், எங்கள் நிறுவனத்தின் நிலுவைத் தொகை 1040 மில்லியன் ரூபாயாகும். ஆனால் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் அதிலிருந்து 609 மில்லியன் ரூபாயை வசூலிக்க முடிந்தது.

ஏனைய அனைத்து வரி நிலுவைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் (வரிக் கொள்கை, சர்வதேச விவகாரங்கள் மற்றும் சட்டங்கள்) சமன் சாந்த கருத்துரைத்தபோது, “நாடு மீண்டும் சுமூக நிலைக்கு வருவதன் மூலம் கடந்த ஆண்டை மிஞ்சிய வரி வருவாயினை ஈட்ட முடிந்துள்ளது. 2024 இல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 2024 பில்லியன் ரூபாயாகும். அதன்படி இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 40% வருமானமும், மீதமுள்ள ஆறு மாதங்களில் 60% வருமானமும் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

வரி வருவாய் செயல்முறையை செயற்திறன் மிக்கதாக மாற்றும் வகையில் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கான தனிப் பிரிவொன்றும் நிறுவப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற நடவடிக்கை காரணமாக தற்போது உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட வரி வருமானம் 1066 பில்லியன் ரூபாயாக உள்ளது.

அத்துடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 188 பில்லியன் ரூபாய் வரி நிலுவையாக காணப்படுகிறது. மதுவரித் திணைக்கள ஊழியர்களின் அர்ப்பணிப்பினால் 104 பில்லியன் ரூபாய் மீளப் பெறப்பட்டுள்ளது. மேலும் 84 பில்லியன் ரூபாய் வரி நிலுவையில் உள்ளது. அதைப் பெறுவதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2023 இல் நான்கரை இலட்சமாக இருந்த வரிக் கோப்புகளின் எண்ணிக்கை, தற்போது பதினொன்றரை இலட்சமாக மாறியுள்ளது. இந்த ஆண்டில் புதிதாக 47 இலட்சம் வரி இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நாட்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் மாறுவேடத்தில் நிறுவனங்களுக்குச் சென்று வரி வசூலிப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நிறுவனங்களுக்குச் சென்று வரி அறவிடுவதில்லை. விழிப்புணர்வுக்காக மட்டுமே நிறுவனங்களுக்குச் செல்கிறார்கள். எனவே, முகமூடி அணிந்த யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என மக்களை அறிவுறுத்துகிறோம். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளோம்.”

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் நிதி அதிகாரி அனுர முத்துகுடே கருத்து தெரிவித்தபோது, “2024 இல் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 1533 பில்லியன் ரூபாயாகும். இவ்வருடம் ஓகஸ்ட் 25ஆம் திகதி வரை இலங்கை சுங்கத் திணைக்களம் 963.7 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் நிலுவையிலுள்ள வரித் தொகை 58.6 பில்லியன் ரூபாய் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் அரச நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரித் தொகை 57.6 பில்லியன் ரூபாயாகும். எனவே, அந்த வரியின் பெறுமதி பூஜ்ஜியமாக காணப்படுகிறது. மீதமுள்ள வரியை வசூலிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில நிலுவைத் தொகைகள் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீடித்துக் காணப்படுகின்றன.

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் புதிய ‘குறைகேள் பிரிவு’ திறக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம். 940 பணியாளர்களின் வெற்றிடங்களுக்கு மத்தியிலேயே வரி சேகரிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் வருமான வரி செலுத்தாமலிருக்க ஒருபோதும் எமது ஊழியர்கள் இடமளித்ததில்லை.”

No comments:

Post a Comment