ஒரு குடும்பத்தால் மலையக சமூகம் வங்குரோத்தானது, போலி நாடகம் இனி வெற்றி பெறாது : வேலுகுமார் சாடல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 9, 2024

ஒரு குடும்பத்தால் மலையக சமூகம் வங்குரோத்தானது, போலி நாடகம் இனி வெற்றி பெறாது : வேலுகுமார் சாடல்

(இராஜதுரை ஹஷான்)

ஒரு குடும்பத்தால் இந்த நாடு வங்குரோத்து அடைந்ததைப் போன்று பெருந்தோட்ட சமூகமும் ஒரு குடும்பத்தால் வங்குரோத்தானது. சம்பள விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் நிலை காணப்படுகிறது. தோட்ட முகாமையாளர்களுக்கு விருந்துபசாரம் வழங்கி பெருந்தோட்ட மக்களை காட்டிக் கொடுத்தது யார் என்பது தற்போது பகிரங்கமாகியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுக்குமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பெருந்தோட்டத்துறை தொடர்பில் மலையக அமைச்சர் சபையில் செவ்வாய்க்கிழமை (9) குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெருந்தோட்ட மக்கள் பற்றி அவர் வாடி, உருகி பேசியதை அவதானிக்க முடிகிறது.

அவர் குறிப்பிட்ட விடயங்களை சமூகம் மீட்டிப்பார்க்க வேண்டும். இரு விடயங்களை அவரது உரையில் காண முடிந்தது. மலையக சமூகம் ஏனைய சமூகத்தைப் போன்று அங்கீகாரம் பெறவில்லை, பெருந்தோட்ட மக்கள் தோட்ட வேலை செய்ய வேண்டும் அல்லது வீட்டு வேலை செய்ய வேண்டும் என்ற நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலைமையில் பெருந்தோட்ட மக்கள் இருப்பதற்கு யார் காரணம் என்பதை பெருந்தோட்ட இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தொழிற்சங்க தலைவர்களாக கடந்த 60 ஆண்டுகளாக யார் இருந்தார்கள் என்பதை அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பச்சை கட்சி, நீல கட்சி அரசாங்கம் அமைத்தால் அமைச்சுப் பதவிகளை யார் வகித்தது என்பதையும் கேட்க விரும்புகிறேன். இவர்களே பெருந்தோட்ட மக்களின் அவல நிலைக்கு காரணம் என்பதை இந்த அமைச்சருக்கு மீண்டும் தெரியப்படுத்துகிறேன்.

சலுகை அரசியல் பற்றி இந்த அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ஆகவே சலுகை அரசியல் பற்றி நாங்கள் இவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். 5 இலட்சத்து 40 ஆயிரமாக இருந்த தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 1 இலட்சத்து 15 ஆயிரமாக குறைந்து விட்டதாக அமைச்சர் ஆதங்கப்படுகிறார். இந்த நிலைமையை யார் உருவாக்கியது என்பதை ஆராய வேண்டும்.

1992 ஆம் ஆண்டு தோட்டங்கள் கம்பனிகளுக்கு வழங்கப்படும்போது அரசாங்கத்தில் மலையக பிரதிநிதியாக இருந்தது யார் ? ஒப்பந்தங்களுக்கு கைச்சாத்திட்டது யார் ? ஆகவே இவர்களிடம் போய் கேளுங்கள் மலையக மக்களின் அவல நிலைக்கு யார் காரணம் என்று, இந்த நாடு ஒரு குடும்பத்தால் வங்குரோத்தாக்கப்பட்டது. அதேபோல் பெருந்தோட்ட சமூகமும் ஒரு குடும்பத்தால் வங்குரோத்தாக்கப்பட்டது. பெருந்தோட்ட மக்களின் வறுமை பற்றி பேசி இவர் முதலை கண்ணீர் வடிக்கிறார்.

மே 01 ஆம் திகதி மேடை போட்டு சம்பளம் அதிகரித்து விட்டதாக நாடகம் ஆடினார்கள். தவறான வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தொட்டிலையும் ஆட்டி விட்டு, பிள்ளையையும் கிள்ளி விடும் தன்மை காணப்படுகிறது.

பெருந்தோட்ட மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். மத்திய மாகாண ஆளுநரின் இணைப்பாளர்களாக அமைச்சரின் கட்சியைச் சேர்ந்த ராஜமணி பிரசாத், வேலு யோகராஜன், கோவிந்தன், ரவி குழந்தை வேல், சச்சிதானந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். உள்ளுராட்சி மன்றங்களின் சலுகைகளை பெறுகிறார்கள். ஆகவே இதனைத்தான் சலுகை அரசியல் என்று குறிப்பிட வேண்டும்.

கடந்த 4 ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது .5 ஆம் திகதி ' சிப்எல்' உள்ள பங்களாவில் தோட்ட முகாமையாளர்களுக்கு விருந்துபசாரம் வழங்கி மலையக மக்களை யார் காட்டிக் கொடுத்தது என்பது பகிரங்கமாகியுள்ளது. ஆகவே இவர் இங்கு வந்து முதலை கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். போலி நாடகம் இனி வெற்றி பெறாது. எமது அரசாங்கத்தில் இந்த காட்டிக் கொடுப்புக்களை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார்.

No comments:

Post a Comment