சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குழப்பம் விளைவித்தால் நாடு பாரிய சேதத்துக்குள் அகப்படும் : ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகருக்கு எச்சரித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 30, 2024

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குழப்பம் விளைவித்தால் நாடு பாரிய சேதத்துக்குள் அகப்படும் : ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகருக்கு எச்சரித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு

(நா.தனுஜா)

உயர் நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டிருப்பதுடன், பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையானோரில் அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிவுசெய்ய முடியும். மாறாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர் நீதிமன்றத்துக்கு எதிராக குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால், ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டுக்கு மிக மோசமான சேதம் ஏற்படும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எவ்வித சட்டவலுவும் கிடையாது என்பதால் அதனை ஏற்க முடியாது எனவும், அரசியலமைப்பு பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவிருப்பதால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிப்பதிலிருந்து தான் விலகியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அறிவித்தார். அதுமாத்திரமன்றி தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு முரணான கருத்துக்களையும் அவர் வெளியிட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் உயர் நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளும் வகையிலான இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் அரசியலமைப்புப் பேரவையின் தீர்மானங்களை உயர் நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து சரியானதெனின், அரசியலமைப்பைவிட அரசியலமைப்புப் பேரவை மேலோங்கியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கும்.

ஆனால் எந்தவொரு சட்டத்தினதும் அரசியலமைப்பு ஏற்புடைமை, அரசியலமைப்பின் பிரகாரம் இயங்கும் எந்தவொரு தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அரசியலமைப்பு ஏற்புடைமை என்பன தொடர்பில் இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளல் உயர் நீதிமன்றத்தின் கடமையாகும்.

இலங்கையின் அரசியலமைப்பானது அதிகாரப்பகிர்வுசார் கோட்பாடுகளை உறுதிப்படுத்தும் தொடர் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எனவே அரசியலமைப்பின் அனைத்து சரத்துக்களும் அதிகாரப்பகிர்வு, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக அடிப்படைக்கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு உட்பட்ட விதத்திலேயே பொருள்கோடல் செய்யப்பட வேண்டும்.

அதேபோன்று உயர் நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டிருப்பதுடன், பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையானோரில் அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிவு செய்ய முடியும்.

மாறாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர் நீதிமன்றத்துக்கு எதிராக குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால், ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டுக்கு மிக மோசமான சேதம் ஏற்படும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment