பொலிஸ்மா அதிபர் விவகாரம் மிகவும் சிக்கலானது. அரசியலமைப்பின் 41 (ஈ) உறுப்புரைக்கமைய என்னால் எடுக்கப்பட்ட பிழையான தீர்மானம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக என்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (26) பாராளுமன்றில் பொலிஸ்மா அதிபரின் நியமனம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சபாநாயகர், நாம் எந்தவொரு தவறான தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அரசியமைப்பிற்கமைய நியாயமான, சரியான தீர்மானத்தை ஆழமாக சிந்தித்துதான் எடுத்துள்ளோம்.
உங்களுக்கும் (எதிர்த்தரப்பினரை விழித்து) ஏனையோருக்கும் அந்த தீர்மானம் தவறாகத் தோன்றலாம். ஆனால் நாம் மனச்சாட்சிக்கமைய சரியான முறையிலேயே அந்த தீர்மானத்தை எடுத்தோம்.
நான் வீட்டிலிருந்து இந்த தீர்மானத்தை எடுத்தாகக் கூறியமையும் முற்றிலும் பொய்யாகும். 41(ஈ) - 5 உறுப்புரைக்கமையவே எனக்கான வாக்கினை நான் பயன்படுத்தினேன். 41 (சீ) உறுப்புரைக்கமைய அரசியமைப்பு பேரவையின் அனுமதியுடனும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனும் பொலிஸ்மா அதிபர் நியமனம் நியாமானது.
எனவே இந்த பதவியில் வெற்றிடம் ஏற்பட்டால் அதனை தீர்ப்பதற்கு படிமுறைகள் உள்ளன. அல்லது நீதிமன்றமே இதற்கான தீர்வினை வழங்க வேண்டும். ஜனாதிபதிக்கு கூட இது தொடர்பில் தீர்மானிக்க முடியாத நிலைமையே தற்போது காணப்படுகிறது என்றார்.

No comments:
Post a Comment