எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு நிதியமைச்சு தயாராக உள்ளதாகவும் தேவைகளுக்கு இணங்க அந்த நிதியை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு தேர்தலை நடத்துவதற்கும் 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், அரசாங்கம் கடும் நிதி முகாமைத்துவத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த வகையில் தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்த தடையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக தபால், அச்சகம், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவைப் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் தேவைகளை கருத்திற்கொண்டு ஏனைய நிதியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குமிடையில் நேற்று முற்பகல் விசேட பேச்சு வார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது, கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment