(லியோ நிரோஷ தர்ஷன்)
பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் புதிய அரசியல் கூட்டணி உத்தேச தேர்தல்களில் கதிரை சின்னத்தில் பொதுக் கூட்டணியொன்றை அமைத்து போட்டியிடவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் இணைந்து இந்த பொதுக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டணியின் செயல்பாட்டளர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் லான்சா ஆகியோர் தெரிவித்தனர்.
கொழும்பில் புதன்கிழமை (17) இடம்பெற்ற விசேட சந்திப்பு ஒன்றின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
அங்கு மேலும் தெரிவிக்கையில், 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது முக்கிய செயல்பாட்டாளர்களாக உள்ளனர். இதை தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய அரசியல் கட்சிகளிலிருந்து பெரும்பாலான உறுப்பினர்கள் இணையவுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் இணைவார்கள். அப்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 45 ஐ தாண்டும் என இதன்போது குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிய முக்கிய அரசியல் பிரமுகர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட புதிய அரசியல் கூட்டணி தற்போது பிரபல அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லன்சா, துமிந்த திசாநாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, நிமல் சிறிபாலடி சில்வா, நளின் பெர்னாண்டோ உள்ளிட்ட பல சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பிரதான செயல்பாட்டாளர்களாக உள்ளனர்.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாரிய குழுவொன்றும் இந்த கூட்டணியுடன் கைகோர்த்தது. சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, வீரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் புதிய கூட்டணியுடன் இணைந்து மாவட்ட ரீதியிலான அரசியல் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்த கூட்டணி உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராகக் கிளமிறக்கி, அவருக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தமது பலத்தை காண்பித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே அனைவரும் இணைந்த இந்த பொதுக் கூட்டணியில் கதிரை சின்னத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பொதுக் கூட்டணியின் பெயர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment