நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் இளைஞர்களே பாதிக்கப்படுவார்கள் : வேட்பாளர் எங்களிடம் இருக்கும்போது நாங்கள் ஏன் பிற்போட வேண்டும்? - பாலித்த ரங்கே பண்டார - News View

About Us

About Us

Breaking

Friday, July 19, 2024

நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் இளைஞர்களே பாதிக்கப்படுவார்கள் : வேட்பாளர் எங்களிடம் இருக்கும்போது நாங்கள் ஏன் பிற்போட வேண்டும்? - பாலித்த ரங்கே பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் இளம் சந்ததியினரே அதிகம் பாதிக்கப்படப்போகின்றனர். அதற்கு இடமளிப்பதா என்பதை இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும். அத்துடன் தேர்தலை பிற்போடுவதற்கு எங்களுக்கு எந்த தேவையும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற கட்சியின் பிராந்திய இளம் அமைப்பாளர்களை அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வீழ்ச்சியடைந்திருந்த நாட்டையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பெடுத்து, தற்போது மக்கள் ஓரளவு நிம்மதி மூச்சுவிட முடியுமான நிலைக்கு கொண்டுவந்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரசியல் அனுபவமில்லாத, சாதாரண செயலாளர் ஒருவரை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பிரதிபலனே நாடு இந்த நிலைக்கு செல்ல பிரதான காரணமாகியது. அதனால் மீண்டும் பரீட்சித்துப் பார்க்க ஒருவரை மக்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யுமானால் நாடு மீள கட்டியெழுப்ப முடியாத பாதாள நிலைக்கு தள்ளப்படும்.

அவ்வாறான நிலைக்கு நாடு தள்ளப்பட்டால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது இளம் சந்ததியினராகும். வயது முதிர்ந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் அதன் பாதிப்பை குறுகிய காலத்துக்கே அனுபவிப்பார்கள். அதனால் நாடு மீண்டும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலையை விட மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிப்பதா என்பதை இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட தேசிய மக்கள் சக்தி நாடு பூராகவும் மக்கள் பேரணிகளை நடத்தி, மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக பிரசாரம் செய்துவர ஆரம்பித்தது. இதனை பார்த்துக் கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியும் பிரசார கூட்டங்களை நடத்த ஆரம்பித்தது. இவர்கள் தங்களின் கூட்டங்களுக்கு தூர பிரதேசங்களில் இருந்து பஸ்களில் ஆட்களை அழைத்துவந்தே சனத்தை காட்டுகின்றனர். இதற்காக பாரியளவில் பணம் செலவழித்து வருகிறார்கள். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி தற்போதுதான் தேர்தல் பிரசார கூட்டம் நடத்த ஆரம்பித்திருக்கிறது.

கண்டியில் நாங்கள் நடத்திய கூட்டத்தில் பாரிய மக்கள் கூட்டம் வந்திருந்தது. இந்த கூட்டத்துடன் இவர்களது கூட்டங்கள் பின்தள்ளப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்கும்போது இவர்கள் வீரர்கள் போன்று செயற்பட்டனர். நாங்கள் களத்துக்கு வந்ததுடன் இவர்களின் மக்கள் கூட்டம் செயலிழந்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பிற்போட முயற்சிப்பதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். தேர்தலை பிற்போடுவதற்கு எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. தேர்தல் பிற்படுவதால் எங்களுக்கே அது பாதிப்பாக அமைகிறது. அதனால் விரைவாக ஜனாதிபதி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

நாடு வீழ்ச்சியடையும்போது, நாட்டை பொறுப்பேற்று, நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவந்த வேட்பாளர் எங்களிடம் இருக்கும்போது நாங்கள் ஏன் தேர்தலை பிற்போட வேண்டும்?

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது ரணில் விக்ரமசிங்க. அப்படி இருக்கும்போது தேர்தல் பிற்போடப்பட்டால் எங்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தலுக்கான திகதியை அறிவிக்குமாறு நாங்கள் தேர்தல் ஆணையாளரை கேட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment