எதிர்க்கட்சியினர் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும் என்கிறார் நிதி இராஜாங்க அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 18, 2024

எதிர்க்கட்சியினர் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும் என்கிறார் நிதி இராஜாங்க அமைச்சர்

நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றுக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாகவே நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இது தொடர்பாக எதிர்மறையான மற்றும் ஆதாரமற்ற போலியான அறிக்கைகளை வெளியிடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பொருளாதார ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிஞர்கள் ஆகியோரை பொதுவான மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகயிலாளர் மாநாட்டிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ”ஜனாதிபதித் தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக முடிவுகளில் மிகவும் வலுவான முடிவாக அமையும் என்பதை நாம் அறிவோம். இவ்வாறான வேளையில் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நாட்டின் நிலைமையையும் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான களமொன்று அமைக்கப்பட வேண்டும். மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் மேம்பாடு என்பன அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தில் பகிரங்க விவாதங்களுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை மீட்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் செய்த சாதகமான விடயங்கள் மூலம் நாட்டை சரியான பாதைக்கு கொண்டு வர முடிந்தது.

இது தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் பொருளாதார ஆய்வு நிறுவனங்களின் நிபுணர்களை பொது மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

கடந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகளை விரிவாக தௌிவுபடுத்த நிதி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் தயாராக உள்ளேன்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான புதிய கடன் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனின் கீழ் 7% சலுகை வட்டியுடன் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது. இதற்காக 50 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, மத்திய தரத்திலான தொழில்களை வலுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதன் கீழ், அதிகபட்சமாக 10 மில்லியன் ரூபாவிற்கு உட்பட்ட கடனைப் பெற முடியும். அத்துடன் சிறிய தேயிலை தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு 06 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு 02 பில்லியன் ரூபா வழங்கப்படும்.

கடன் உத்தரவாத நிறுவனம் ஒன்றின் தேவை காணப்படுகிறது. அந்த கடன் மூலம், எதிர்வரும் ஒக்டோபரில் கடன் உத்தரவாத நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடனுக்கான பிணையொன்றை வைக்க முடியாத வேளையில் கடன் உத்தரவாத நிறுவனம் அதற்கான உதவிகளை வழங்கும்.

அத்துடன் வாகன இறக்குமதியில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து துறைகள் தொடர்பிலும் ஆராய விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் முதல் அமர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெற்றது. இதன்படி ஒகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின்னர் வாகனங்களை எப்படி இறக்குமதி செய்வது என்பது குறித்து முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.

அத்துடன், சுங்க பரிசோதகர்கள் ஆட்சேர்ப்புக்கான பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. நேர்முகப் பரீட்சை ஜூலை 26 - 27 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. மேலும் உதவி சுங்க அத்தியட்சகர்களுக்கான ஆட்சேர்ப்பு முடிவுகள் இந்த வாரம் வெளியாகும். இந்த ஆட்சேர்ப்பு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது.” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment