ஜனாதிபதி ஒதுக்கிய நிதியைக் கண்டு பல அரசியல்வாதிகள் பொறாமை கொள்கிறார்கள் - ஹரீஸ் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Thursday, July 18, 2024

ஜனாதிபதி ஒதுக்கிய நிதியைக் கண்டு பல அரசியல்வாதிகள் பொறாமை கொள்கிறார்கள் - ஹரீஸ் எம்.பி

நூருல் ஹுதா உமர்

இந்த நாட்டில் ஒரு எதிர்க்கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் நான். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியத்தையும், வடகிழக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி விடயங்களையும் அவருக்கு விளக்கினேன். அவற்றைப்பற்றி உணர்ந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு சேவை செய்ய எனக்கு நிதியினை வழங்கியிருக்கிறார். அதைக்கொண்டு பாடசாலைகள், பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள், பிரதேச உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறேன். இந்த நிதி எனது சொந்த தேவைகளுக்கு தரப்பட்டதல்ல. எனது பிரதேச அபிவிருத்தி பணிகளுக்கு தரப்பட்டவை. இதனைக் கண்டு பல அரசியல்வாதிகள் பொறாமை கொள்கிறார்கள். எனக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள தொடர்பு என்ன என்று அரசியல்வாதிகள் சிலர் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனையில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், நான் படிக்கும் காலங்களில் பல்கலைக்கழகம் என்பதும் பட்டங்கள் பெறுவது என்பதும் பல மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஒரு காலத்தில் உயர்தர பரீட்சையில் போதியளவு சித்தியடையாது விட்டால் அல்லது பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டால் கூலி தொழிலுக்கு செல்கின்ற காலம் இருந்தது.

ஆனால் இப்போது இருக்கின்ற அரசாங்கத்தினதும், எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் கல்விக் கொள்கையானது உயர்தரத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டாலும் அந்த மாணவன் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று மேற்படிப்பை பூர்த்தி செய்யக்கூடிய வழிவகைகள் அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

தனது பட்டப்படிப்பை மேற்கொள்ள போதியளவு பணம் இல்லாதவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இன்று ரணில் விக்ரமசிங்க வங்கிகளூடாக உருவாக்கி உள்ளார்.

இளைஞர், யுவதிகளுக்கான வாய்ப்புகள் இலங்கையில் பரந்து கிடக்கின்றது. ஒவ்வொருவரும் தமக்கு பிடித்த துறைகளில் மேற்படிப்புகளை கற்றுக் கொள்ளலாம். எல்லாத்துறைகளிலும் இப்போது நிறைய சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. அண்மையில் அம்பானி வீட்டில் பாட்டுப்பாடியவரே சில நிமிடங்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பளமாக பெற்றுள்ளார். 

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நானும் உயர்தரத்தில் கலைத்துறையில் படித்தவன். பின்னர் பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தில் கற்று இப்போது நான் சட்டத்தரணியாக இருக்கிறேன்.

துரதிஷ்டவசமாக பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மூலமாக நான் அரசியலுக்குள் நுழைந்தேன். எனவே நீங்களும் உங்களுக்கு பிடித்த துறையை படித்து அதில் ஒரு நல்ல இடத்தை பெற்றுக் கொள்ளுங்கள். 

நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு கல்விமான் என்பதனால் அவருக்கு கல்வியின் அவசியம் தெரிகிறது. அதனால் கல்வியை மேம்படுத்த இவ்வாறான வேலைத்திட்டங்களை செய்கிறார்.

நீங்களும் உங்களுக்கு விருப்பமான துறையை தெரிவுசெய்து அதில் முழு கவனத்தையும் செலுத்தினால் அது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 

உலகில் சிறந்த பாடகர்கள் இருக்கிறார்கள். சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். இதுபோல பல துறைகளிலும் பிரகாசிக்கும் பலரும் இருக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்ட துறையில் சென்றதால் அவர்கள் நல்ல இடத்தை அடைந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் மிக முக்கியமானது நம்பிக்கை. எனவே முயற்சி என்பதை நீங்கள் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். 

No comments:

Post a Comment