வரவு செலவுத் திட்டத்தால் ஒதுக்கப்படும் நிதியால் மாத்திரம் கல்வியை கட்டியெழுப்ப முடியாது - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Sunday, July 7, 2024

வரவு செலவுத் திட்டத்தால் ஒதுக்கப்படும் நிதியால் மாத்திரம் கல்வியை கட்டியெழுப்ப முடியாது - சஜித் பிரேமதாச

எமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அது மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இந்த உரிமைகள் தவிர, பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், வீடு மற்றும் காணி உரிமையும் அடிப்படை உரிமைகளாக உள்ளடக்கப்பட வேண்டும். நவீன காலத்திற்கு ஏற்றாற் போல் கல்வி மாறவில்லை என்றால் அது மாணவர்களினது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 89 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பஸ், காலி ஓல்கொட் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் நேற்று (06) கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தெரிவித்தார்.

வங்குரோத்தான நாட்டில் இந்த திட்டங்களை முன்னெடுக்கும்போது கூட ஒரு தரப்பினர் பரிகாசம், கிண்டல், நக்கல், கேலி செய்து வருகின்றனர். இந்த திட்டங்களை செயல்படுத்துவது அவர்களது பார்வையில் தவறாக தெரிகிறது. இந்த விமர்சனங்களை முன்வைத்து வருபவர்களுக்கு பிள்ளைகள் பட்டுவரும் துயர் குறித்து அறியாதவர்களாக இருந்து வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கோவிட் தொற்றுநோய் மற்றும் வங்குரோத்து நிலை போன்றவற்றால் ஏற்பட்ட சூழ்நிலைகளை இந்நாட்டில் இலவசக் கல்வியால் நன்மையடைந்து வரும் பிள்ளைகளும் அவர்களது பெற்றோர்களும் எதிர்கொண்டனர். பிள்ளைகளுக்கு அன்றாட உணவு உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

சில பாடசாலைகளில் பிள்ளைகள் உணவின்றி பட்டினியால் வாடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் நாட்டின் கல்வித்தரத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளை பிரித்து ஒதுக்கக் கூடாது. எந்த நேரத்திலும் பிள்ளைகளை பிரித்து நோக்கக் கூடாது. மதிய உணவு கூட வேறுபாடின்றி அனைத்து பிள்ளைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசில் இதனை ஓர் தேசிய கொள்கையாக முன்னெடுப்பேன்.

வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இதற்கு புதிய வழிமுறைகளை கையாள வேண்டும். பிள்ளைகளுக்கு மொழித்திறன் ஆற்றல் மேம்படும் போது, ​​எதிர்காலத்தில் அவர்கள் தொழிற் சந்தைக்குச் செல்லும்போது அது அவர்களுக்கு பெரும் உதவியாக மாறும். எப்போதும் தூர நோக்கில் நீண்ட கால, மத்திய கால மற்றும் குறுகிய கால மூலோபாய முறையில் ஸ்மார்ட்டாக நாம் இதற்கான கொள்கை வரைவுகளை வரைய வேண்டும்.

தனிப்பட்ட அபிலாஷைகளை விட, நாட்டின் அபிலாஷைகள் முதன்மை பெற வேண்டும். பிரபஞ்சம் மூச்சுத்திட்டங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டதல்ல. உண்மையில் நாட்டுக்கு பெறுமதி சேர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் வேலைத்திட்டமாகும்.

நாடு என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை, நட்புறவு மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை நாட்டின் பலமாக கருத வேண்டும். இதனடிப்படையில் திறந்த நோக்கில் பயணிக்க வேண்டும். நாட்டின் அபிலாஷைகளை அனைவரும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment