ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் திணைக்களம் தயார் ! - News View

About Us

About Us

Breaking

Monday, July 22, 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் திணைக்களம் தயார் !

ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு மற்றும் உத்தியோகபூர்வ தேர்தல் அறிவித்தல் விநியோகம் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், அனைத்து வீடுகளுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 8,000 தொழிலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பான முறையில் மாற்றுவதற்கு தபால் திணைக்களங்கள் கடமைப்பட்டுள்ளதாக  பிரதி தபால்மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இந்த வருடம் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறையைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் நடைபெறும்.

அந்த வகையில், தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகளை அஞ்சல் திணைக்களம் ஆரம்பிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment