நாங்களும் தயார், ஆணைக்குழுவும் தயார், ஜனாதிபதி தயாரா ? - கேள்வி எழுப்பியுள்ள நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2024

நாங்களும் தயார், ஆணைக்குழுவும் தயார், ஜனாதிபதி தயாரா ? - கேள்வி எழுப்பியுள்ள நாமல் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்களும் தயார் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தயார். தேர்தலில் போட்டியிட தயாரா? என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிக்க வேண்டும். தேர்தலை பிற்போடும் யோசனைகளை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்தால் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், நாமல் ராஜபக்ஷ மற்றும் சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை (16) கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டதாவது, தேர்தலகளுக்கான அறிவிப்பு விடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றவுடன் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது எமது அரசியல் கொள்iகையாகும். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டு அதனுடாக ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு அவர் பதவி விலகி பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு, 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில் 19 ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா அல்லது ஆறு ஆண்டுகளா என்று தர்க்கங்களை முன்வைப்பது பயனற்றது. ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் இனி தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்களும் தயார், தேர்தல்கள் ஆணைக்குழுவும் தயார் ஆகவே தேர்தலுக்கு தயாரா, இல்லையா என்பதை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். தேர்தலை பிற்போடும் வகையில் அரசாங்கம் ஏதேனும் யோசனைகளை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்தால் அதற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம்.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை ஆணைக்குழு வெளியிட்டதன் பின்னர் ஆறு வாரங்களுக்குள் எமது தேர்தல் பிரசாரங்களை நிறைவு செய்வோம். எமது வேட்பாளரே தேர்தலில் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment