தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களை பிரயோகியுங்கள் : ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ள நீதி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Friday, July 19, 2024

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களை பிரயோகியுங்கள் : ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ள நீதி அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 2023ஆம் ஆண்டு 03ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களை பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை சர்வஜன வாக்குரிமையை மக்களுக்கு வழங்கினாலும் ஆரம்பம் முதல் தேர்தல்களில் இடம்பெறும் ஊழல் காரணமாக மக்களின் உண்மையான பிரதிநிதித்துவம், பெறுபேறுகள் ஊடாக உறுதிப்படாமல் இருக்கின்றன.

இந்த ஊழல்களில் இலஞ்சம், அச்சுறுத்தல், ஏமாற்றுதல், அழுத்தம் பிரயோகித்தல் போன்ற விடயங்கள் இடம்பெறுவதுடன் மக்களின் வறுமை நிலையை பயன்படுத்திக் கொண்டு அவர்களை ஏமாற்றும் சம்பவங்கள் கடந்த காலங்களில் பாரியளவில் இடம்பெற்றிருக்கின்றன.

கடந்த 2020 இல் இடம்பெற்ற தேர்தலின்போதும் சட்டவிரோதமான முறையில் பொருட்கள் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது ஒருசில வேட்பாளர்கள் 200 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளனர்.

இவ்வாறு நாட்டின் ஜனநாயகத்தை நசுக்கும் தேர்தல் கலாசாரத்தை மாற்றியமைத்து, சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் பூரண ஒத்துழைப்புடன் 2023ஆம் ஆண்டு 03ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டம் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு செல்லுபடியாகிறது. அதன் பிரகாரம், இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் உள்ளிட்ட தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளல், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கு மற்றும் வேட்பாளருக்கு செலவிட முடியுமான கட்டணத்தை வரையறுத்தல் தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

எனவே, இந்த புதிய சட்டத்தை எதிர்வரும் தேர்தலில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இந்த சட்டத்தை தேர்தல் ஆணைக்குழு எவ்வாறு செயற்படுத்தப்போகிறது என்ற விடயம் தொடர்பாக கட்சிகளின் செயலாளர்கள் அல்லது பொறுப்புகூறக் கூடியவர்களை அழைத்து அறிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment