(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதியுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. சுயாதீனமான முறையில் தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ளோம். தேர்தல் செலவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தேர்தல் பணிகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை கொண்டு ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரச அச்சக திணைக்களம், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் தபால்மா அதிபர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அரச அச்சகத் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது அச்சகத் தலைவர் '2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் செலவுகளை காட்டிலும் இம்முறை செலவுகள் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அச்சிடல் பணிகளுக்கு தேவையான கடதாசிகள் உள்ளன என்று குறிப்பிட்டு தமது தேவைகளுக்கான செலவுகளை மதிப்பட்டு ஆணைக்குழுவுக்கு குறிப்பிடுவதாக குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு 2.7 பில்லியன் ரூபாவும், 2019 ஆம் ஆண்டு 4.5 பில்லியன் ரூபாவும் செலவாகியுள்ளது. பணவீக்கம் மற்றும் மூல பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிளை கருத்திற்கொண்டு இம்முறை தேர்தல் செலவுகளுக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் பணிகளுக்கு அனைத்து அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வித தடையும் கிடையாது. ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது சட்டமா அதிபர் ஊடாக ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்தோம்.
தேர்தலை நடத்துவதற்கு சாதகமான வகையில்தான் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவை தவிர வேறு எந்த வழிகளாலும் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதாயின் அது குறித்து ஆணைக்குழு உரிய தீர்மானத்தை எடுக்கும் என்றார்.
No comments:
Post a Comment