ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 50 வீதத்திலிருந்து 100 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் இந்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி நிதியத்துக்கு இருதய நோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களிடமிருந்து 8,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் அதற்கான கொடுப்பனவுகளை அந்த வருடத்திலேயே வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டபோது அதனை 50 வீதத்திலிருந்து 100 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற ஒரு வார காலத்திலேயே இந்த கொடுப்பனவுகளுக்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விண்ணப்பங்கள் கிடைத்து ஒரு வார காலத்தில் அதனை வழங்குவதற்கு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ், கேகாலை மாவட்டத்தில் 4,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஒரு இலட்சத்து 16 ஆயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்படுகிறது. எதிர்கால சந்த்தியினரின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் இந்த முதலீடு நாட்டின் எதிர்கால பயணத்துக்கான சாதகமான வேலைத்திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்பட்ட கொடுப்பனவு தொடர்பில் நோக்கும்போது, நோயாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, குறிப்பாக இருதய நோய் சத்திர சிகிச்சைக்காக இந்த நிதியத்தின் மூலம் அதிகளவு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த கொடுப்பனவை வழங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் முறையான வகையில் சிறந்த முறைமையைப் பின்பற்றி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் ஒரு இலட்சத்து 16 ஆயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவது பெருமைப்படக்கூடிய விடயம்.
தற்போதைய அரசாங்கம் எமது நாட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கை இது என்றும் இதுவே அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment