(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கே மக்கள் அரசாங்கம் ஒன்றை அமைக்கிறது. நாட்டு மக்களின் உயிர், உடமைகளை பாதுகாக்க அரசாங்கத்தால் முடியாவிட்டால் அந்த அரசாங்கத்தால் எந்த பயனும் இல்லை என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு இலங்கை மன்ற கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தேசிய மத்தியஸ் சபை 1958 காலப்பகுதியில் எமது நாட்டில் அறிமுகப்படுத்தியபோதும் அது வெற்றியளிக்காதபோது, அந்த நடவடிக்கை நிராகரிக்கப்பட்டது.
பின்னர் 1988 இல் மீண்டும் மத்தியஸ்த சபை சட்டம் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இன்றுவரை மத்தியஸ்த சபை இயங்கி வருகிறது. ஒவ்வாெரு வருடமும் ஜூலை 18ஆம் திகதி தேசிய மத்தியஸ்த தினம் கொண்டாடப்படுகிறது.
நாட்டொன்றில் மக்களின் உயிர், உடமைகளை பாதுகாப்பது அந்த நாட்டின் அரசாங்கத்தின் கடமையாகும். நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கே மக்கள் அரசாங்கம் ஒன்றை நியமிக்கிறது. அந்த அரசாங்கத்தால் மக்களின் உயிர் உடமைகளை பாதுகாக்க முடியாவிட்டால் அந்த அரசாங்கத்தினால் பயனில்லை. சமூகத்தில் முரண்பாடுகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்திய நாடுகளில் வன்முறைகளை ஏதாவது ஒருவழியில் இலகுவாக தடுக்க முடியும். ஆனால் ஜனநாயக நாடுகளில் அதனை அவ்வாறு செய்ய முடியாது. அதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இருந்து மத்தியஸ்த சபை முறை இருந்து வருகிறது. 1215ஆம் ஆண்டு அப்போதைய அரசர்களுக்கும் மக்களுக்கும் முரண்பாடுகள் வரும்போது அதனை தீர்ப்பதற்கே மத்தியஸ்த சபை அமைக்கப்பட்டது. அன்று முதல் அந்த நடவடிக்கை உலகில் ஜனநாயக நாடுகளில் இருந்து வருகிறது.
மக்களுக்கு நீதியை நிராகரிப்பதும் நீதியை தாமதிப்பதும் கூடாது. அவ்வாறு இடம்பெற்றால் அது ஏதாவது ஒரு இடத்தில் வெடிக்கும். 2022 இல் எமது நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதனால் மக்கள் மத்தியில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சமாதானம், ஐக்கியம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேலும் அரசாங்கம் நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தால், அந்த நாடு தானாக வளர்ச்சியடையும். தேர்தல் காலம் வரும்போது லீக்வான் யூ. மஹதீர் மொஹமத் போன்றவர்களின் பெயர்களை தெரிவிக்கின்றனர். அவர்கள் நாட்டை முன்னேற்றவில்லை. மாறாக அவர்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தார்கள். இதன் மூலம் அந்த நாட்டு விவசாயிகள் நாட்டை வளப்படுத்தினார்கள். இன்றும் சிங்கப்பூரில் ஒரு மனிதன் எத்தனை மில்லியன் ரூபாவையும் கையில் எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் சென்றுவர முடியும். அந்த நிலைமை எமது நாட்டில் இல்லை.
எனவே சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது, செலவினங்களை குறைப்பது மற்றும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்துகொடுப்பது நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் கடமையாகும். சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்காவிட்டால்தான் நாட்டுக்குள் கொலை, காெள்ளை என்பன தலைதூக்க காரணமாகின்றன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தினால் எந்த பயனும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment