ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலை ஆதரிப்போம் : ராஜபக்ஷர்களுடன் தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் கிடையாது - புதிய அரசியல் கூட்டணி - News View

About Us

About Us

Breaking

Friday, July 19, 2024

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலை ஆதரிப்போம் : ராஜபக்ஷர்களுடன் தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் கிடையாது - புதிய அரசியல் கூட்டணி

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு யாராலும் இயலாது. பொது வேட்பாளராக உத்தேச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள அவருக்கு ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவித்த புதிய அரசியல் கூட்டணி, ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் கிடையாத நிலையில் நாட்டை மீண்டு அழிவுக்கு கொண்டுசெல்லும் வகையிலேயே செயல்படுவதாகவும் குறிப்பிட்டது.

தேசிய பத்திரிகைளின் ஆசிரியர்களை புதன்கிழமை (17) சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, சுதத் மஞ்சுள மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் நளின் பெரனாண்டோ ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் ஏற்பட்ட அழிவுகளை நாம் அனைவரும் அறிவோம். எந்தவொரு அரசியல் தலைவரும் நாட்டை பொறுப்பேற்க வரவில்லை. பல தியாகங்கள் மற்றும் கடின உழைப்பின் வெளிப்பாடாக இன்று ஓரளவு நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவிர நாட்டை பொருளாதார ரீதியில் மீட்டு எடுக்க கூடிய தலைவர்கள் வேறு யாரும் இல்லை. தற்போதைய காலகட்டத்தில் அவர் மாத்திரமே உள்ளார்.

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அவரை புதிய அரசியல் கூட்டணி ஆதரிக்க உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தான் தேர்தலில் போட்டியிட உள்ளமையை கூடிய விரைவில் அறிவிக்க உள்ளார். நாட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சிறந்த தலைவரை தெரிவு செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது.

எதிர்த்தரப்பில் போட்டியிட உள்ள இருவருமே நாடு பாதாளத்தில் விழுந்திருந்தபோது பொறுப்பேற்க மறுத்தனர். ஆனால் இன்று நாட்டை பாதுகாக்கப்போவதாக கூறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளனர். இவர்கள் இருவருக்கும் எவ்விதமான திட்டங்களோ நாட்டிற்கான எதிர்கால நோக்கங்களோ கிடையாது. வெறும் சுயநல அரசியல் நோக்கங்களுக்காகவே செயல்படுகின்றனர். அவ்வாறு இல்லையெனில் மக்கள் மத்தியில் சென்று தமது திட்டங்களை கூற வேண்டும்.

ஏமாற்று அரசியல் இனி நாட்டு மக்கள் மத்தியில் செல்லாது. ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை வைத்துத்தான் அன்று அவரை ஜனாதிபதியாக்க முன்னின்று செயல்பட்டோம். தற்போதும் அவ்வாறுதான் ஆதரவளிக்கின்றோம்.

ராஜபக்ஷர்களின் கொள்கை மீதான முரண்பாட்டின் காரணமாகவே இன்று சுயாதீனமாக செயல்படுகின்றோமே தவிர, அவர்களுடன் தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் கிடையாது. பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் போட்டியிட அனைத்து அரசியல் தரப்புகளும் ஒன்றிணைய வேண்டியதுள்ளது.

ஜனாதிபதி ரணிலை யார் ஆதரித்தாலும் எமக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அவர் வெற்றி பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. நாட்டு மக்களும் இம்முறை கட்சி அரசியலுக்கு முன்னுரிமை அழிக்க மாட்டார்கள். தனித்து தீர்மானிக்கும் போக்கே மக்கள் மத்தியில் உள்ளது. புதிய அரசியல் கூட்டணியில் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்த எண்ணிக்கை 40 ஐ தாண்டும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment