LTTE மீதான தடையை நீக்கும் விண்ணப்பத்தை நிராகரித்தது பிரிட்டன் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 23, 2024

LTTE மீதான தடையை நீக்கும் விண்ணப்பத்தை நிராகரித்தது பிரிட்டன்

பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சமர்ப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டு ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை இதை நிராகரித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ அரசாங்கம், அகிம்சை வழிகளில் அதன் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர விரும்புவதால், பிரிட்டனில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்படக்கூடாதென, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாதத்தை முன்வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், இலங்கையின் சுதந்திர தமிழ் அரசை நிறுவுவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் நம்புவதை, ஆணைக்குழு கவனத்தில் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2001 மார்ச் 29 இல், பிரிட்டனில் தடை செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு இதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

2018 டிசம்பர் 07ஆம் திகதியன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு, பிரிட்டன் அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டுக்கான பிரிட்டன் மையம் ஆகியவற்றின் மதிப்பாய்வு செயல்முறையைத் தொடர்ந்து, இராஜாங்க செயலர் 2019 மார்ச் 08 ஆம் திகதியன்று விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார்.

இருந்தபோதும் 2020 அக்டோபர் 21ஆம் திகதியன்று மேன்முறையீட்டு ஆணையம் மேன்முறையீட்டாளர்களின் மேன்முறையீட்டை அனுமதித்தது.

இது தொடர்பான தீர்ப்பு 2021 மே 13ஆம் திகதி வழங்கப்பட்டது. அதில், 2012 ஜூன் 03ஆம் திகதிக்குள் தடை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கூடுதல் பிரதிநிதித்துவங்களை வழங்க வேண்டும், மேலும் அரச செயலர் தனது விண்ணப்பத்தின் மீதான தடையை நீக்குவதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆணையகம் குறிப்பிட்டிருந்தது. 

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்வதற்கு இராஜாங்க செயலாளர் புதிய முடிவை எடுத்து, அது 2021 ஆகஸ்ட் 31ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் 2021 அக்டோபர் 12ஆம் திகதியன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அந்த முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்தது. அத்துடன் மற்றொரு குழுவும் தடை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. எனினும் அந்த விண்ணப்பங்களும் இராஜாங்க செயலாளரால் நிராகரிக்கப்பட்டன. 

இந்த நிலையிலேயே தற்போது மேன்முறையீட்டு ஆணைக்குழு இந்த மேன்முறையீட்டை நிராகரித்ததுடன், பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர உத்தரவிட்டுள்ளது. 

மேன்முறையீடு செய்தவர்கள் சார்பில் பீட்டர் ஹெய்ன்ஸ் மற்றும் பொது சட்ட நலன் மையத்தால் அறிவுறுத்தல் அமைப்பின் சாந்தி சிவகுமாரன் ஆகியோர் ஆணையகத்தில் முன்னிலையாகினர். 

இராஜாங்க செயலாளர் சார்பில் பென் வட்சன் கே.சி., அண்ட்ரூ டீக்கின் மற்றும் வில் ஹேஸ் ஆகியோர் ஆஜராகினர்.

No comments:

Post a Comment