சகல பாடசாலைகளும் வழமை போன்று நாளை இடம்பெறும் : கல்வி அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 23, 2024

சகல பாடசாலைகளும் வழமை போன்று நாளை இடம்பெறும் : கல்வி அமைச்சு

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் நாளை திங்கட்கிழமை (24) வழமை போன்று கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளையும் (24) நாளை மறுதினமும் (25) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாடசாலைகளிலுள்ள கல்வி சாரா ஊழியர்கள் அறிவித்துள்ள நிலையிலேயே அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்வி சாரா ஊழியர்கள் நாளையும், நாளை மறுதினமும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கல்வி சாரா ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்மால் இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட 80 கோரிக்கைகளையும் அரசாங்கம் ஒரு சதத்துக்கேனும் கவனத்தில் கொள்ளவில்லை. கல்வித்துறைகளிலுள்ள 30,000 கல்வி சாரா ஊழியர்களுக்காக 10 கொள்கைகள் நடைமுறையிலுள்ளன. ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு கொள்கைகள் பின்பற்றப்படுவதால் தாம் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எதிர்கொண்டுள்ள இவ்வாறாக பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தியே தாம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment