பலஸ்தீன அரசு 5 வருடங்களுக்குள் நிறுவப்பட வேண்டும் : உடல் தொடர்பில் புதிய சட்டத்தை கொண்டு வரத் தீர்மானம் - ஜனாதிபதியிடம் 10 மில்லியனுக்கும் அதிக நன்கொடை வழங்கிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 23, 2024

பலஸ்தீன அரசு 5 வருடங்களுக்குள் நிறுவப்பட வேண்டும் : உடல் தொடர்பில் புதிய சட்டத்தை கொண்டு வரத் தீர்மானம் - ஜனாதிபதியிடம் 10 மில்லியனுக்கும் அதிக நன்கொடை வழங்கிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல்

காஸா பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 5 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க தெரிவித்தார்.

காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலில் இன்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பிரார்த்தனையில் கலந்துகொண்டதன் பின்னர் ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது மௌலவி ஹாரித்தினால் தொழுகை நிகழ்த்தப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல், 10,769,417 ரூபாயை நன்கொடையாக வழங்கியது. 
பிரார்த்தனையின் பின்னர், காஸா நிதியத்திற்கான காசோலை பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த விசேட பிரார்த்தனை நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்தவர்களோடு சிநேகபூர்வமாக கலந்துரையாடியதோடு, செல்பி புகைப்படங்களிலும் இணைந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “நான் மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருக்கும் வேளையில், இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி. இந்த பள்ளிவாசல் முஸ்லிம் கலைக்கு சிறந்த உதாரணமாகக் விளங்குகிறது. காத்தான்குடி முஸ்லிம்கள் அரசர் காலத்திலிருந்து அங்கு வாழ்ந்து வந்த ஒரு பிரிவினர். 
மட்டக்களப்பின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இங்கு வந்தேன். இந்த மாகாணத்தில் விவசாயத்தை நவீனமயமாக்குவதுடன் சுற்றுலாவை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம். அதேபோல், கல்வியையும் மேம்படுத்த வேண்டும்.

காஸா நிதியத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குவதற்காக இன்று எனக்கு இங்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. காஸா விவகாரத்தில் அரசாங்கம் வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அது என்றும் மாறாது. ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக, காஸா மக்களை பழிவாங்க வேண்டாம்.

பலஸ்தீனம் தீர்வை எட்ட உதவ வேண்டும். 5 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசை நிறுவ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். காலக்கெடு இல்லாமல் பேசுவதில் அர்த்தமில்லை. ஏனென்றால், 40, 50 வருடங்களாக இது குறித்து பேசப்பட்டது. எனவே, காலக்கெடுவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இஸ்ரேலின் பாதுகாப்பு பிரச்சினை இருந்தால் அது குறித்துத் தனியாக விவாதிக்கலாம். ஆனால் பலஸ்தீன அரசு உருவாக்கப்பட வேண்டும். ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்திருக்கிறோம். அதை நாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

காஸா போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக காஸா நிதியத்தை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதலில் ஒரு மில்லியன் டொலரை வழங்க ஏற்பாடு செய்தோம். நாம் சிறிய நாடாக இருந்தாலும், வங்குரோத்து நிலையை அறிவித்திருக்கும் வேளையிலும் ஒரு மில்லியன் டொலரை வழங்க முன்வந்திருக்கிறோம். இதற்கு பொதுமக்கள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். எனவே இந்த நன்கொடைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் உடல்களை அடக்கம் செய்வது குறித்த பிரச்சினைகளை முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அது குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை செயல்படுத்தாமல் தனி குழு நியமிக்கப்பட்டது. இதனால் முஸ்லிம் மக்கள் மனம் நொந்துள்ளனர்.
எனவே, உடலை அடக்கம் அல்லது தகனம் செய்தல் அல்லது உடலை விரும்பினால் மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கலாம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வரத் தீர்மானித்திருக்கிறோம். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது.

நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நான் முன்னுரிமை அளித்துள்ளேன். அந்த இலக்கை மிகக் குறுகிய காலத்தில் அடையலாம். அதன்பிறகு, நாட்டின் மற்றைய பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தப்படும். அத்துடன், மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்கும் வகையில் உறுமய வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.”

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.எம்.ஹிஸ்புல்லாஹ், புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர் கே.எல்.எம்.பரீத், மௌளவி இல்ஹாம், முன்னாள் மட்டக்களப்பு மேயர் ஏ.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.தௌபீக், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment