(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள இருப்பதாக ஒரு வருடமாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றபோதும் யாரும் இதுவரை இணைந்து கொள்ளவில்லை. ஆனால் அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்துடன் இருக்கும் 12 பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ள இருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 20 பேர் இணைந்து கொள்ளப்போவதாக ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே அரசாங்கம் தெரிவித்து வருகிறது. ஆனால் எமது தரப்பிலிருந்து ஹரின், மனுஷவை தவிர வேறு யாரும் இதுவரை செல்லவில்லை. ஆனால் அரசாங்கத்தில் இருந்த 11 பேர் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர். அடுத்துவரும் இரண்டு வாரங்களில் மேலும் 12 பேர் எம்முடன் இணைந்து கொள்ள இருக்கின்றனர்.
அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கட்சிகள் மற்றும் ரிஷாத் பதியுதீன் கட்சியைச் சேர்ந்த 12 பேர் எம்முடன் கூட்டணி அமைக்க இருக்கின்றனர். நாட்டின் வரலாற்றில் பலம்மிக்க கூட்டணியை இன்னும் சில தினங்களில் நாங்கள் அமைக்க இருக்கிறோம்.
அரசாங்கம் எம்முடன் இருப்பவர்களை இழுத்துக் கொள்ள முயற்சிக்கின்றபோதும் நாங்கள் அரசாங்கத்துடன் இருப்பவர்களை எம்முடன் இணைத்துக் கொண்டு வருகிறோம்.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்து தயார்படுத்தல்களையும் நாங்கள் தொகுதி மட்டத்தில் முன்னெடுத்து வருகிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச 55 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். வெற்றி பெறுவதற்கு 70 இலட்சம் வாக்குகளைப் பெற வேண்டி இருக்கிறது. அதனால் 20 இலட்சம் உறுப்பினர்களை கட்சியில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.
அதேநேரம் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவு்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 4 இலட்சம் வாக்குகளே கிடைத்தன. அவர் வெற்றி பெறுவதாக இருந்தால் இந்த முறை 60 இலட்சம் வாக்குகளை பெற வேண்டும். அது சாத்தியமில்லை. தற்போது அவர்களின் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் தேர்தலில் வாக்கெண்ணும்போது அவர்களுக்கு அந்தளவு வாக்கு இருக்காது. இது வழமையான விடயமாகும்.
எனவே ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர், ஒக்டோபர் காலப்பகுதிக்குள் இடம்பெற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு தேவையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இந்த மாதம் கிடைக்கிறது. அதனால் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment