திருகோணமலை வைத்தியசாலையில் எரிக்கப்படுகின்ற வைத்திய கழிவுகளினால் மக்கள் அதிக சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை வைத்தியசாலையில் கழிவுப் பொருட்களை எரிக்கின்ற இயந்திரத்தின் புகைபோக்கியானது ஒரு வருடத்திற்கு மேலாக உடைந்துள்ள நிலையில் அது திருத்தப்படாமல் குறித்த பகுதியில் தொடர்ந்தும் வைத்தியசாலைக் கழிவுகள் எரிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் வெளியேறுகின்ற புகை மூலம் வைத்தியசாலை உட்பட அதனை அண்டிய பகுதிகளிலும் இரசாயன வாடை வீசுவதோடு, அது வளி மாசடைவை ஏற்படுத்தி, வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள், திருகோணமலை கடற்கரையை நோக்கி வருகின்ற உல்லாச பயணிகள் உட்பட அருகில் வாழும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் வைத்தியசாலையின் நச்சுத்தன்மை மிக்க மருந்துக்கழிவுகள், சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்படுகின்ற உடற்பாகங்கள், பிளாஸ்டிப் பொருட்கள் போன்ற பல பொருட்கள் எரிக்கப்படுவதாக தெரிய வருகின்றது.
ஆரம்பத்தில் குறித்த புகையானது கிட்டத்தட்ட 60 அடி உயரமான புகைபோக்கியின் மூலம் மேல் வளிமண்டலத்திற்கு விடுவிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது 40 அடி உயரமான புகைபோக்கி உடைந்துள்ள நிலையில் அதனை சீர் செய்யாமல் கழிவுப் பொருட்கள் எரிக்கப்பட்டு வருவதனால் மக்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இது தொடர்பாக பலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றும் இதுவரை இது சீர் செய்யப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment